இனி UPI மூலம் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்! கால் கடுக்க வரிசையில் நிற்க தேவையில்லை!

இனி பள்ளிக் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்களின் பெற்றோர் எளிய UPI ஸ்கேன் மூலம் கட்டணத்தை செலுத்தும் வசதி அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் CBSE மற்றும் NCERT உள்ளிட்ட கல்வி அமைப்புகளுக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளது. அதில், பள்ளிகளில் பணம் கையாளும் முறையை நவீனப்படுத்தும் நோக்கில் டிஜிட்டல் கட்டண முறை, குறிப்பாக UPI வசதியை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் UPI பயன்பாடு வேகமாக அதிகரித்து வரும் சூழலில், இந்த முடிவு காலத்திற்கேற்ற நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. பள்ளிகள் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுவதால், பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் பெரும் வசதியும் பாதுகாப்பும் கிடைக்கும். குறிப்பாக ரசீது இழப்பு, அல்லது நேரம் விரயம் போன்ற சிக்கல்கள் இல்லாமல் கட்டணத்தை உடனடியாக செலுத்த முடியும்.

மேலும், பள்ளி நிர்வாகத்திற்கும் இதன் மூலம் நிதி பதிவுகளை துல்லியமாக பராமரிக்கவும், நிர்வாகத் தவறுகளைத் தடுக்கவும் முடியும். தணிக்கைச் செயல்முறைகளும் எளிதாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், இந்த டிஜிட்டல் நடவடிக்கை பள்ளிக் கல்வி நிர்வாகத்தை நவீனப்படுத்துவதோடு, பொதுமக்களின் நிதி மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வை உயர்த்தும். மாணவர்கள் சிறு வயதிலேயே டிஜிட்டல் பரிவர்த்தனையைப் பழகுவதால், எதிர்காலத்தில் தொழில்நுட்பத்துடன் நெருக்கமாக இணைந்த சமூகமாக வளர்வார்கள் என்று மத்திய அரசு நம்புகிறது.

Related News

Latest News