‘நான் போர்களை நிறுத்துவதில் வல்லவன்!’ பெருமிதத்தில் மிதக்கும் டிரம்ப்!

இஸ்ரேல்—காசா மோதல் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் இந்தப் போரை “நான் நிறுத்திய எட்டாவது போர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2023 அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பரபரப்பான தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 240க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக எடுத்துச் செல்லப்பட்டனர். இதற்கு பதிலாக இஸ்ரேலின் கடுமையான ராணுவ நடவடிக்கையால் காசாவுக்கு சேதம் ஏற்பட்டது; இரண்டு ஆண்டுகளாக நீடித்த மோதலில் பல பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

ட்ரம்ப் தனது அதிகாரபூர்வ விமான ஏர் ஃபோர்ஸ் ஒன்-ல் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் பேட்டி அளித்து, ‘இந்தப் போர் ஓய்ந்துவிட்டது. இனி அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்புமென்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

காசா அமைதிக்குத் தங்கள் பங்களிப்புக்கு கத்தாரையும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார். ஹமாஸ் தரப்பிலிருந்து எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே சில பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவது ஆச்சரியமாக இருந்து, இது அமைதிக்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.

மேலும் டிரம்ப், ‘இஸ்ரேல் – காசா போர் நான் நிறுத்தியுள்ள 8-வது போர். இப்போது ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே போர் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் போர் குறித்து நான் திரும்பி வந்ததும் கவனிக்க வேண்டும். ஏற்கெனவே நான் இன்னொரு போரையும் அதாவது ரஷ்யா – உக்ரைன் போரையும் நிறுத்தும் முயற்சியில் உள்ளேன். நான் போர்களை நிறுத்துவதில் வல்லவன்’ என்று ட்ரம்ப் கூறினர்.

Related News

Latest News