ரிசர்வ் வங்கி புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டு, வங்கிகள் கடன் வழங்கும் விதிமுறைகளில் உச்சவரம்பு நிர்ணயம் செய்துள்ளது. குறிப்பாக, வங்கியின் இயக்குநர்கள், புரமோட்டர்கள், முக்கிய மேலாண்மை அதிகாரிகள் மற்றும் வங்கியில் 5% பங்குகளை வைத்திருப்போர் – இவர்களின் உறவினர்கள், அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு கடன் வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படியே கடன் வழங்கினாலும், சில நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும். அதன்படி, அத்தகைய கடன்கள் தொடர்பான முடிவெடுக்கும் கூட்டங்களில் சம்பந்தப்பட்ட நபர்கள் பங்கேற்கக்கூடாது. மேலும், ஜாமீன், கடன் தள்ளுபடி, மீட்பு, வாராக்கடன் தீர்வு போன்ற செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
மட்டுமல்லாமல், கடனுக்கான உச்சவரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் கோடிக்கு மேற்பட்ட சொத்துகளைக் கொண்ட பெரிய வங்கிகள் அதிகபட்சம் ரூ.50 கோடி வரை கடன் வழங்கலாம். 1 லட்சம் கோடி முதல் 10 லட்சம் கோடி வரை சொத்துள்ள நடுத்தர வங்கிகள் ரூ.10 கோடி வரையும் 1 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள சிறிய வங்கிகள் ரூ.5 கோடி வரை மட்டுமே கடன் வழங்கலாம். உள்ளூர் வங்கிகள் மற்றும் மாநில, மத்திய கூட்டுறவு வங்கிகள் ரூ.1 கோடி வரை, NBFC-கள் ரூ.10 கோடி வரை, மற்ற நிதி நிறுவனங்கள் ரூ.50 கோடி வரை கடன் வழங்க அனுமதிக்கப்படுகின்றன.
இவ்வாறு வழங்கப்படும் கடன்களின் விவரங்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். கூட்டுறவு வங்கிகள் நபார்டுக்கு (NABARD) அறிக்கை அளிக்க வேண்டும். மேலும், ஆண்டுதோறும் நிதி அறிக்கையில் தொடர்புடையவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் விபரங்கள் மற்றும் அவற்றில் வாராக்கடனாக மாறிய தொகைகள் வெளிப்படையாக குறிப்பிடப்பட வேண்டும்.