Tuesday, October 7, 2025

கூகுள் குரோமை தூக்கி சாப்பிட்ட ‘உலா’! Zoho நிறுவனத்தின் பிரவுசர்! ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடம்!

சென்னை தலைமையிடமாகக் கொண்ட ZOHO கார்ப்பரேஷன், சமூக ஊடக துறையில் “அரட்டை” செயலியின் மூலம் ஏற்கனவே ஒரு புதிய அலை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பிற்கு மாற்றாகக் கருதப்படும் இந்த செயலி, உலகளவில் இதுவரை அறிமுகமாகாத சில தனித்துவ அம்சங்களைக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜோஹோ தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய வெப் பிரவுசரான “உலா”, ஆப் ஸ்டோரில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கூகுள் குரோம், ஆப்பிள் சஃபாரி போன்ற முன்னணி பிரவுசர்களுக்கு நேரடி போட்டியாகத் திகழும் ‘உலா’, தனியுரிமை பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பு அம்சங்களால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக ‘குரோமியம்’ அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், பயனர்களின் தரவுகளை சேகரிக்காது, சேமிக்காது, விற்பனை செய்யாது என்பதே ‘உலா’-வின் முக்கிய வித்தியாசம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களின் தகவல்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் கூகுள் போன்ற நிறுவனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த உலா பிரவுசர் குழந்தைகளுக்கான பாதுகாப்பான சூழலை வழங்குகிறது. வெப் டெவலப்பர்கள் மற்றும் சோதனையாளர்களுக்காக சிறப்பு வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அதோடு, Ad Blocker மற்றும் Tracker Protection ஆகிய அம்சங்கள் இயல்பாகவே உள்ளமைக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பான மற்றும் இடையூறு இல்லாத இணைய அனுபவம் கிடைக்கிறது.

‘உலா’ தற்போது Android, iOS, Windows, Mac, Linux உள்ளிட்ட அனைத்து முக்கிய இயங்குதளங்களிலும் பதிவிறக்கம் செய்யக்கூடியதாக உள்ளது. இருப்பினும், Perplexity Comet போன்ற புதிய போட்டியாளர்களிடம் உள்ள Agentic AI அம்சங்கள் இதில் இல்லாததால், எதிர்காலத்தில் கூகுள் குரோம் ஆதிக்கத்திற்கு நேரடியாக சவாலாக மாறுமா என்பது சந்தை ஆய்வாளர்களின் சந்தேகமாக உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News