இராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல்பகுதியில் அரிய வகை ஆழ்கடல் மீன் ஒன்று மீனவர்களின் வலையில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ‘டூம்ஸ் டே மீன்’ என அழைக்கப்படும் இந்த மீன் கரையொதுங்கினால் பேரழிவு வரும் என்பது ஜப்பான் உட்பட பல ஆசிய நாடுகளில் நிலவி வரும் நம்பிக்கையாகும்.
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடல் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் வலையில் சிக்கியது சுமார் 10 கிலோ எடையும், 5 அடி நீளமும் கொண்ட மீன். அரிய மீன் என்பதால் பாம்பன் பகுதி மக்கள் பெரும் ஆர்வத்துடன் வந்து கண்டு ரசித்ததாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த துடுப்பு மீன் அதாவது Oar Fish எனப்படும் இனத்தைச் சேர்ந்தது. நீளமான, சதைப் பிடிப்பற்ற, ரிப்பன் போலத் தோற்றம் கொண்டது. உடலின் பக்கவாட்டில் ஆரஞ்சு நிற துடுப்புகள் காணப்படும். இவை பெரும்பாலும் மிதவெப்ப மண்டலக் கடல்களில் அரிதாகவே காணப்படுகின்றன. அதிகபட்சம் 16 மீட்டர் வரை வளரக்கூடியவை’ என தெரிவித்தனர்.
மேலும், இம்மீன் கரையொதுங்கினால் பேரழிவு வரும் என்ற நம்பிக்கை ஆசிய நாடுகளில் பழமையானது. இதனால்தான் இதற்கு “டூம்ஸ் டே மீன்” என்று பெயர் கிடைத்தது. ஆனால் இதற்கான அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை என்றும், இது வெறும் மூடநம்பிக்கையே என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
அரிய மீன் கரையொதுங்கிய செய்தி பாம்பன் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், இது கடல்சார் உலகில் அரிதாகக் காணப்படும் ஒரு முக்கிய நிகழ்வு மட்டுமே என்றும் இது எந்த அழிவுக்கும் அறிகுறி இல்லை என்றும் விளக்கமளிக்கப்படுகிறது.