இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதாவது UIDAI பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பயன்பாட்டை எளிதாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதன்படி, 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கான கட்டணங்களை ஒரு வருடத்திற்கு விலக்கு அளித்துள்ளது.
சாதாரணமாக, குழந்தை 7 அல்லது 15 வயதை எட்டும் போது கைரேகை, கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை புதுப்பிக்க வேண்டும். இதற்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், புதிய அறிவிப்பின் படி இந்த தொகை செப்டம்பர் 30, 2026 வரை வசூலிக்கப்படாது.
அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த திட்டம், நாடு முழுவதும் சுமார் 6 கோடி குழந்தைகளுக்கு நன்மை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், பள்ளி சேர்க்கை, நுழைவுத் தேர்வு பதிவு, உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் மானிய பரிமாற்ற திட்டங்கள் போன்றவற்றில் குழந்தைகள் சிரமமின்றி சேவைகளைப் பெறலாம்.
UIDAI தெரிவித்ததாவது, ‘புதுப்பிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களுடன் கூடிய ஆதார், மாணவர்களுக்கு பல்வேறு அரசு மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களில் தடையின்றி பயன்பட உதவும். குறிப்பாக, நேரடி நிதி பரிமாற்றம் போன்ற சேவைகளை துல்லியமாகப் பெற குழந்தைகளுக்கு ஆதார் புதுப்பிப்பு மிக முக்கியமானதாகும்.
இந்த விலக்கு, பெற்றோர்கள் மீது இருந்த நிதிச்சுமையை குறைப்பதோடு, குழந்தைகள் தேவையான கல்வி மற்றும் அரசு நலன்களை எளிதில் பெற வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.