அமெரிக்காவில் அரசு முடக்கம் ஆறாவது நாளாகத் தொடரும் நிலையில், நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. அரசாங்கத்தை மீண்டும் திறப்பதற்கான ஐந்தாவது வாக்கெடுப்பும் தோல்வியடைந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் இப்போது ஒரு புதிய நிபந்தனையை விதித்திருக்கிறார்.
தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “முதலில் அவர்கள் எங்கள் அரசாங்கத்தை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும். அதுக்கப்புறம், ஜனநாயகக் கட்சியினரின் தோல்வி அடைந்த சுகாதாரக் கொள்கைகளைப் பற்றி அவர்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்” என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.
அதாவது, “முதல்ல அரசாங்கத்தைத் திறங்க, அப்புறம்தான் மத்த எந்தப் பேச்சுவார்த்தையும்” என்பதுதான் டிரம்பின் தற்போதைய நிலைப்பாடு.
இந்த எல்லாப் பிரச்சனைக்கும் காரணம், சுகாதாரப் பாதுகாப்பு நிதிதான். அமெரிக்கக் குடிமக்களுக்குக் குறைக்கப்பட்ட சுகாதார நிதியை மீண்டும் வழங்க வேண்டும் என்பது ஜனநாயகக் கட்சியினரின் கோரிக்கை. ஆனால், “சட்டவிரோதக் குடியேறிகளுக்கு சுகாதார மானியங்களை வழங்கவே அவர்கள் முயற்சிக்கிறார்கள்” என்று குடியரசுக் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த அரசியல் சண்டையால், இப்போது அமெரிக்காவின் நிர்வாகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. 100 பேர் கொண்ட செனட் சபையில், மசோதாவை நிறைவேற்ற 60 ஓட்டுகள் தேவை. ஆனால், ஆளும் குடியரசுக் கட்சிக்கு இன்னும் 8 ஓட்டுகள் குறைவாக இருக்கிறது. ஜனநாயகக் கட்சியினர் ஆதரவு இல்லாமல் அவர்களால் எதையும் செய்ய முடியாது.
இந்த அரசு முடக்கத்தின் விளைவு என்ன தெரியுமா?
சுமார் ஏழரை லட்சம் அரசு ஊழியர்கள், சம்பளம் இல்லாமல் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். ராணுவம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் போன்ற அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்கள், சம்பளமே இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களது பரிதாப நிலை தொடர்கிறது.
அதுமட்டுமல்ல, 16 ஜனநாயகக் கட்சி ஆளும் மாநிலங்களுக்கான 26 பில்லியன் டாலர் நிதியையும் டிரம்ப் நிர்வாகம் முடக்கியுள்ளது. இதனால் உணவு உதவித் திட்டங்கள், தேசியப் பூங்காக்கள் போன்ற பல சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது குறித்தும் குழப்பம் நீடிக்கிறது. “பணிநீக்கம் தொடங்கிவிட்டது” என்று டிரம்ப் கூற, “இல்லை, இன்னும் தொடங்கவில்லை” என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் மாற்றிப் பேசுகின்றனர்.
இந்த அரசியல் பனிப்போரில், அப்பாவி அரசு ஊழியர்களும், பொதுமக்களும்தான் பாதிக்கப்படுகின்றனர். இந்த அரசு முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாத கேள்வியாகவே உள்ளது.