குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற தலைப்பில் புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அவர் பேசியதாவது: நாடு முழுவதும் வங்கிகள், ரிசர்வ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் பண்டுகள், ப்ராவிடென்ட் பண்டுகள் உள்ளிட்ட பல நிதி நிறுவனங்களில், உரிமை கோரப்படாமல் நீண்டகாலமாக கிடக்கும் தொகை சுமார் ரூ.1.84 லட்சம் கோடியாக உள்ளது. இது அரசின் சொத்து அல்ல, மக்களுக்கே சொந்தமானது. அந்த உரிய உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் மீண்டும் திருப்பித் தருவதே அரசின் கடமை என அவர் கூறினார்.
பல ஆண்டுகளாக மக்கள், தங்களின் உரிமை கோரப்படாத பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆவணங்களின் பற்றாக்குறை, மறந்துவிடப்பட்ட காப்பீட்டு திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு இல்லாமை ஆகிய காரணங்களால் இத்தொகை அதிகரித்துவிட்டது.
இந்த சூழலில், மக்களின் பணத்தை உரியவர்களிடம் சேர்ப்பதற்காக மூன்று மாத காலத்திற்கு இந்த பிரச்சாரம் நடத்தப்படுகிறது. ‘விழிப்புணர்வு, அணுகல், நடவடிக்கை’ என்ற மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டு இது முன்னெடுக்கப்படும்.
மேலும், உரிமை கோரப்படாத தொகை பற்றிய தகவலை மக்களுக்குச் சென்று சேர்ப்பது, ரிசர்வ் வங்கியின் UDGAM தளத்தின் மூலம் தேட உதவுவது, மற்றும் உரிய ஆதாரங்களை வழங்கும் உரிமையாளர்களின் பணத்தை மீண்டும் வழங்க அதிகாரிகள் முன்வருவது ஆகியவையே இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் என அவர் விளக்கினார்.