புதையல் தேடும் கதைகளையெல்லாம் நாம் திரைப்படங்களில்தான் பார்த்திருப்போம். ஆனால், அமெரிக்காவின் ஃபுளோரிடா கடல் பகுதியில், ஒரு உண்மையான புதையல் வேட்டை நடந்து, ஒரு மில்லியன் டாலர், அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்கவர் புதையல், 300 ஆண்டுகளுக்கு முன்பு, கடலில் மூழ்கிப் போன ஒரு ஸ்பானியக் கப்பலிலிருந்து கிடைத்துள்ளது. 1715-ஆம் ஆண்டு, ஸ்பெயினுக்குப் பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியை ஏற்றிச் சென்ற 11 ஸ்பானியக் கப்பல்கள், ஃபுளோரிடா கடல் பகுதியில் ஏற்பட்ட ஒரு பயங்கரப் புயலில் சிக்கி, கடலுக்குள் மூழ்கின. அன்று முதல், இந்தப் பகுதி “புதையல் கடற்கரை” (Treasure Coast) என்றே அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக, இந்தப் பகுதியில் மில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், “1715 ஃப்ளீட் – குயின்ஸ் ஜூவல்ஸ்”(1715 Fleet – Queen’s Jewels) என்ற மீட்பு நிறுவனம், சமீபத்தில் ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. கடலுக்கு அடியில், உலோகக் கண்டுபிடிப்பான்களைப் பயன்படுத்தித் தேடியபோது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியிலான ஸ்பானிய நாணயங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெக்சிகோ, பெரு போன்ற ஸ்பானியக் காலனி நாடுகளில் அச்சிடப்பட்ட இந்த நாணயங்களில், அவை தயாரிக்கப்பட்ட ஆண்டு மற்றும் இடத்தின் அடையாளங்கள் கூடத் தெளிவாகத் தெரிகின்றன.
“இந்தக் கண்டுபிடிப்பு, வெறும் பணத்தைப் பற்றியது அல்ல. இது, சொல்லப்படாத பல கதைகளைக் கொண்டது. ஒவ்வொரு நாணயமும், வரலாற்றின் ஒரு பகுதி,” என்கிறார் இந்த மீட்பு நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குனர். ஒரே தேடலில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்கள் கிடைத்தது மிகவும் அரிதானது என்றும் அவர் கூறியுள்ளார்.
சட்டப்படி, கடலுக்கு அடியில் கண்டெடுக்கப்படும் எந்த ஒரு வரலாற்றுப் பொருளும், ஃபுளோரிடா மாநிலத்திற்கே சொந்தமாகும். இந்த மாநிலச் சட்டத்தின்படி, கண்டெடுக்கப்பட்ட புதையலில் 20 சதவீதத்தை, மாநில அரசு, தனது அருங்காட்சியகங்களுக்காக எடுத்துக்கொள்ளும். மீதமுள்ளவை, அதைக் கண்டுபிடித்த நிறுவனத்திற்கே சேரும்.
300 ஆண்டுகளாக, கடலுக்கு அடியில் புதைந்திருந்த ஒரு ரகசியம், இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்னும் மூழ்கிப் போன பல கப்பல்களின் புதையல்கள், கடலுக்கு அடியில் எங்கோ காத்துக்கொண்டேதான் இருக்கின்றன.