அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தப்படுவதற்கான “ஷட்டவுன்” அச்சம் உலக சந்தைகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலை அமெரிக்க சந்தையை மட்டுமின்றி, உலகளாவிய முதலீட்டுச் சந்தைகளையும் பாதித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களில் தடாலடியாக உயர்ந்து, 10 கிராம் 24 கேரட் தங்கம் இந்தியாவில் 1,18,800 ரூபாயாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
செப்டம்பர் 30ம் தேதி முடிவடையக்கூடிய நிதியாண்டு செலவின திட்டத்திற்கு அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக ஒப்புதல் வழங்கப்படவில்லை. இதனால் அரசின் முக்கிய சேவைகள், அமைச்சர்கள் சம்பளம், அரசு அலுவலகச் செலவுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, அமெரிக்க அரசு ஷட்டவுன் நிலைக்கு வந்துள்ளது.
இந்த அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டாக தங்கம் மீது திரும்புகின்றனர். ஆகவே தங்க விலை தொடர்ந்து உயர்வதை சந்தையில் காணலாம். அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் அரசியல் நிச்சயமின்மை, நிதி குழப்பம், பணவீக்கம் ஆகியவை தங்கம் மீது முதலீட்டாளர்களை ஈர்க்கும். அச்சமுள்ள சூழலில் பல பில்லியன் டாலர்கள் தங்கத்தில் முதலீடு செய்யப்படுவதால், விலை அதிகரிக்கும்.
அமெரிக்க நாடாளுமன்றம் அக்டோபர் 7ம் தேதி செலவின மசோதாவை நிறைவேற்றாவிடில், வேலைவாய்ப்பின்மை மேலும் மோசமாகி, பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்கள் குறையும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதும் தங்கம் மீது முதலீட்டுகளை அதிகரிக்கும்.
இந்த அரசியல் நிலை, பணவீக்கம் மற்றும் நிதி குழப்பம் இந்தியா உள்ளிட்ட உலக சந்தைகளையும் பாதித்து, முதலீட்டாளர்களை பாதுகாப்பான தங்க முதலீட்டிற்கு திருப்புகின்றது. இந்த காரணங்களால் தங்கம் விலை உச்சாணி கிளையில் போய் எட்டிவிடும் என கணிக்கப்படுகிறது.