அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசின் சமீபத்திய கருத்துகள் இந்தியாவிற்கு எதிராக திரும்பி வருவதாகக் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு குறித்த நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், ‘இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளும், உயர்ந்த பொறுப்புகளும் வழங்கப்படக்கூடாது’ என்று கருத்து தெரிவித்தார். ஆனால் அதே நிகழ்ச்சியில் கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி டெக் நிறுவனங்களின் தலைவர்கள் பெரும்பாலும் இந்தியர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதான அதிகாரிகளில் சுமார் 70% இந்தியர்கள்தான்.
இந்நிலையில், உலகளாவிய தொழில்நுட்ப துறையில் இந்தியர்களும், தமிழர்களும் முன்னிலை வகித்தாலும், நமது அன்றாட டிஜிட்டல் பயன்பாடுகள் பெரும்பாலும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்டவையே என்பதும் உண்மை. எனவே ‘Made in India’ நோக்கில் நாமே நமக்குத் தேவையான செயலிகள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கும் தன்னிறைவை அடைய வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோளாக உள்ளது.
இந்த நோக்கத்துக்குச் சான்றாக, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட Zoho நிறுவனம் 2021ஆம் ஆண்டு, அமெரிக்க வாட்ஸ்அப்பிற்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘அரட்டை’ செயலியை அறிமுகப்படுத்தியது. ஆரம்ப கட்டத்தில் இருந்த சின்ன சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு, தற்போது முன்னணி மெசேஜிங் ஆப்களுக்கு போட்டியளிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், ஸ்னாப்சாட் போன்றவற்றில் காணப்படும் அனைத்து வசதிகளும் ‘அரட்டை’யில் உள்ளன. எளிய UI, பாதுகாப்பான தகவல் பரிமாற்றம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.
சமீபத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியர்கள் உள்ளூர் டிஜிட்டல் தளங்களை ஆதரிக்க வேண்டும் என்றும், குறிப்பாக ‘அரட்டை’ செயலியை பயன்படுத்துமாறு அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே 35 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்ததால், இந்திய ஆப் ஸ்டோரில் வாட்ஸ்அப்பை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளது.