இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து வடிவமைத்த நாசா-இஸ்ரோ NISAR செயற்கைக்கோள் எடுத்த முதல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அமெரிக்காவின் காடுகள், ஈரநிலங்கள், சிறிய தீவுகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய இந்த நிசார் செயற்கைக்கோள், பூமியை முறையாகக் கண்காணித்து அதன் மேற்பரப்பில் நிகழும் மாற்றங்களை மிகத் துல்லியமாக அளவிடும் திறன் பெற்றது. ‘சிந்தட்டிக் அபர்சர் ரேடார்’ தொழில்நுட்பத்தின் மூலம் இரவு நேரத்திலும், மேகமூட்டத்திலும் கூட துல்லியமான புகைப்படங்களைப் பதிவு செய்ய முடியும்.
சூழல் பாதிப்புகள், பனிப்பாறைகள் உடைதல், நிலத்தடி நீர் சிக்கல்கள், கடல் மட்ட உயர்வு, இயற்கை பேரிடர்கள் போன்றவற்றை ஆராய்வதற்கும், பூமி குறித்த விரிவான தரவுகளை வழங்குவதற்கும் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 30ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து நிசார் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த தொடர்பாக நாசா வெளியிட்ட அறிக்கையில், ‘நிசார் செயற்கைக்கோள் எடுத்த முதல் புகைப்படங்கள், எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கும் அறிவியல் தரவுகளின் முன்னோட்டம். இதன் மூலம் பூமியின் நிலப்பரப்பு மற்றும் பனிக்கட்டி பரப்புகளில் ஏற்படும் மாற்றங்களை விஞ்ஞானிகள் விரிவாக ஆராய முடியும். மேலும் இயற்கை பேரிடர்கள் மற்றும் பிற சவால்களுக்கு எதிர்வினையாற்ற ஆயத்தமாக வழிகாட்டும்’ என்று தெரிவித்துள்ளது.
பூமியின் இயற்கை சூழலை மிகத் துல்லியமாகப் பதிவுசெய்யும் முயற்சியில், நாசா–இஸ்ரோ கூட்டாண்மையில் உருவான நிசார், உலகளாவிய ஆராய்ச்சிக்குப் பெரும் ஆதாரமாக அமைய உள்ளது என்பதில் சந்தேகமில்லை.