இந்திய குடும்பங்கள் முதலீடு செய்யும் போது பாதுகாப்பு மற்றும் நிச்சயமான வருமானம் முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. பங்குச் சந்தை அதிக லாபத்தைக் கொடுத்தாலும், அதில் உள்ள ஆபத்து காரணமாக பலர் பின்வாங்குகின்றனர். இதற்கு மாற்றாக, அரசு ஆதரவு பெற்ற தேசிய சேமிப்புச் சான்றிதழ் அதாவது NSC மீண்டும் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் கிடைக்கும் NSC, சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நிலையான வருமான திட்டம். இதன் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். முதலீட்டாளர்கள் செலுத்தும் தொகைக்கு அரசு அறிவிக்கும் வட்டி விகிதத்தில் ஆண்டுதோறும் கூட்டு வட்டி அதாவது Compounding Interest வழங்கப்படுகிறது. முதிர்வு காலத்தில் முதலீட்டு தொகையுடன் கூட்டு வட்டியும் வழங்கப்படும். அரசின் முழு உத்தரவாதம் இருப்பதால், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான திட்டமாக NSC பார்க்கப்படுகிறது.
2025-இல் NSC வட்டி விகிதம் 7.7% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம், அதிகபட்ச வரம்பு இல்லை. இதற்கான முதலீடுகள் வருமான வரிச் சட்டம் பிரிவு 80C கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை பெற உதவும். மேலும், NSC சான்றிதழ்களை வங்கிகளில் கடன் பெற அடமானமாக வைக்கலாம்.
நிதி வல்லுநர்கள் கூறுவதாவது, ‘திட்டமிட்ட முதலீட்டின் மூலம் NSCயில் கணிசமான லாபத்தை பெறலாம். உதாரணமாக, ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மொத்தம் ரூ.45 லட்சம் முதலீட்டில் சுமார் ரூ.58 லட்சம் முதிர்வு தொகையை பெறலாம். அதாவது ரூ.13 லட்சம் வட்டி வருமானம் கிடைக்கும். சிறிய முதலீட்டாளர்கள் கூட தங்கள் திறன் படி முதலீடு செய்தால், கணிசமான லாபத்தை ஈட்ட முடியும்.’