அமெரிக்காவில் வசிக்கும் கேரி எட்வர்ட்ஸ் என்ற பெண்ணுக்கு அபூர்வமான அதிர்ஷ்டம் அடித்துள்ளது. வர்ஜீனியாவைச் சேர்ந்த இவர், சமீபத்தில் 1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.25 கோடி, இலங்கை மதிப்பில் சுமார் 45 மில்லியன் ரூபாய் பரிசுத்தொகையை லாட்டரியில் வென்றுள்ளார்.
இந்த அதிர்ஷ்டத்திற்குக் காரணமாக இருந்தது செயற்கை நுண்ணறிவு செயலியான ChatGPT. கேரி எட்வர்ட்ஸ், லாட்டரி சீட்டுகளை வாங்கும் முன், எந்த எண் கொண்ட டிக்கெட்டுகளை எடுக்கலாம் என்று ChatGPTயிடம் கேட்டுள்ளார். அப்போது ChatGPT வழங்கிய எண் தொடரின் அடிப்படையில் அவர் டிக்கெட் வாங்கினார். ஆச்சர்யமாக, அந்த எண்களே அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.
லாட்டரி பரிசு வென்றதைத் தொடர்ந்து, கேரி எட்வர்ட்ஸ் தனது சந்தோஷத்தை ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டார். ஆனால், அந்தப் பணத்தை தனக்காக வைத்துக்கொள்ளாமல், தனது மறைந்த கணவரின் நினைவாக முழுமையாக நன்கொடையாக வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ‘என் கணவர் எப்போதும் உதவிக்கரம் நீட்டுபவர். அவரின் நினைவை நிலைநிறுத்த நன்கொடை வழங்குவதே எனது விருப்பம்’ என்று அவர் கூறியுள்ளார்.
சாதாரணமாக லாட்டரியில் வெல்லும் வாய்ப்பு மிகக் குறைவாக இருந்தாலும், இந்தச் சம்பவம் செயற்கை நுண்ணறிவு பரிந்துரைகளின் மீதான மக்களின் ஆர்வத்தையும், அதிர்ஷ்டத்தின் வினோதத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. கேரியின் கதை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.