வங்கி சேமிப்பு கணக்குகளில் அதிக தொகை பண பரிமாற்றங்கள் நடைபெறும்போது, அவை தற்போது செயற்கை நுண்ணறிவு அதாவது AI மூலம் வரித்துறையினரால் கண்காணிக்கப்படுகின்றன. எனவே, பணத்தின் மூல ஆதாரத்திற்கான ஆவணங்கள் சரியாக இல்லாவிட்டால் வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வர வாய்ப்பு அதிகரிக்கிறது.
சமீபத்தில் பலர் தங்களிடம் இத்தனை பணமே இல்லை என்றாலும், வங்கிக் கணக்கில் நடந்த பரிமாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நோட்டீஸ் பெற்ற சம்பவங்கள் வெளியாகியுள்ளன. முக்கிய காரணம், சேமிப்பு கணக்கில் மிகப்பெரிய அளவில் பணம் சேர்க்கப்படுவது அல்லது அடிக்கடி அதிக தொகை வரவு–செலவு நடைபெறுவது தான்.
வரி நிபுணர் சி.ஏ. கமலேஷ் குமார் கூறுவதாவது: ‘ஒரே நேரத்தில் மிகப்பெரிய தொகையை சேமிப்பு கணக்கில் போடக்கூடாது. வருடத்திற்கு ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் சேமிப்பு கணக்கில் வரவு செய்யப்பட்டால், அந்த தகவலை வங்கி நேரடியாக வரித்துறைக்கு அனுப்பும். தொடர்ந்து அதிக தொகை பரிமாற்றம் நடந்தாலும், அதற்கான சரியான ஆதாரம் இல்லையெனில் சந்தேகத்திற்கு இடமாகும். இதனால் நோட்டீஸ் வரும் அபாயம் உண்டு’ என்றார்.
அதன்படி, பெரிய அளவில் பரிமாற்றம் செய்வோர் பணத்தின் ஆதாரத்தை காட்டும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். உறவினர் ஒருவரிடமிருந்து பெரிய தொகை வந்தால், அதற்கான ஆதாரம் கட்டாயம். மேலும், PAN கார்டு, KYC ஆவணங்கள் இல்லாமல் பெரிய பரிமாற்றம் செய்ய இயலாது. வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் பரிமாற்றங்களை அடிக்கடி கண்காணிக்கின்றன. குறிப்பாக அசாதாரணமான வரவு–செலவு நடந்தால், வங்கி நேரடியாக கேள்வி எழுப்பும் நிலை ஏற்படும்.
இதனால், விதிகளை பின்பற்றி செயல்பட்டால் வரித்துறை நோட்டீஸ் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.