தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை, ஆழ்வார்பேட்டை பகுதி, அவரது வீட்டை சுற்றியுள்ள முக்கியமான சாலைகள், முதலமைச்சர் வாகனம் அடிக்கடி பயன்படுத்தும் சாலைகள் ஆகியவற்றில் அதிக திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்களை பொருத்த முடிவு செய்துள்ளது.
மொத்தம் 110 கேமராக்கள் 29 இடங்களில் நிறுவப்படுகின்றன. இதற்கான இடங்களைக் கண்டறிந்து சென்னை காவல்துறையினர் எந்த இடத்தில் எந்த கேமராக்களை பொருத்த வேண்டும் என்பதையும் ஆலோசித்து முடிவு செய்து உள்ளனர்.
இதற்காக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் வேப்பேரியில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்படுகிறது.
சந்தேகத்துக்குரிய நபர்கள் முதலமைச்சர் வீட்டின் அருகே சென்றாலோ, சந்தேகத்துக்குரிய வகையில் ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்தாலோ ஏ.ஐ.தொழில்நுட்பம் வாயிலாக காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு சில வினாடிகளிலேயே எச்சரிக்கை குறுஞ்செய்தி செல்லும் வகையில் இந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.