கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைபகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது 34. ) இவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன் புதுக்கோட்டையில் ஒரு ஆட்டோவை திருடிக் கொண்டு அதே ஆட்டோவில் திருச்சி வந்துள்ளார். பின்னர் ஜங்ஷன் ரயில் நிலையப் பகுதியில் ஒரு பயணியின் செல்போனை பறிக்க முயன்ற போது போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டார்.
இது தொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீனை கைது செய்து திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தனர். பின்னர் பிரவீன் தனது காது வலிப்பதாக கூறியதன் அடிப்படையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இன்று காலை சிற்றுண்டி வழங்குவதற்காக சிறை காவலர் பிரவீனின் தங்கியிருந்த அறையின் கதவை திறந்து உள்ளார். அப்போது அவர் அந்த காவலரை தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மருத்துவமனையின் நாலா புறமும் சென்று தேடினர் ஆனால் அவர் மாயமாகிவிட்டார்.
இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.