243 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.
3 கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஓரிரு நாட்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பீகார் செல்ல உள்ளார். அங்கு தேர்தல் முன்னேற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆய்வு செய்ய உள்ளார்.
இதனைத்தொடர்ந்து, பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அடுத்த வாரம் அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. பெயர் விடுபட்டவர்கள், தகுந்த ஆவணங்களுடன் சேர்க்க தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்தது. எனவே, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும்போதுதான், எவ்வளவு வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதன் உண்மை நிலவரம் தெரியவரும்.
பெயர் நீக்கத்தில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், சிறப்பு தீவிர திருத்த நடைமுறை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.