தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் செய்த சாதனைகளைக் கொண்டாடும் வகையில், ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற விழா, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் அரசு திட்டத்தால் பயனடைந்த பிரேமா என்பவர் நிகழ்ச்சியில் பேசியபோது, “தன் தங்கை உள்பட நான்கு பேர் இருப்பதாகவும், அவரது தந்தை மிகவும் மோசமான ஒரு ஓட்டு வீடு கட்டியதாகவும், ஒரு மழை வந்தால் வீடு முழுக்க ஒழுகும் என்றும் தெரிவித்தார்.
அந்த பெண் தற்போது அரசு திட்டத்தில் பயன்பெற்று, கல்லூரியில் விடுதியில் இருப்பதாகவும், அங்கு மழை வெயில் என எதைப் பற்றியும் கவலையின்றி தங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், விடுதியில் மழையில் இருக்கும்போதெல்லாம், அம்மா, அப்பா உள்ளிட்டோர் வீட்டில் மழையில் நனைந்துக்கொண்டு இருப்பார்களே என சிந்திப்பேன் எனவும் தெரிவித்தார். தற்போது வேலை கிடைத்துவிட்டதாகவும், அம்மா அப்பாவுக்கு நல்ல வீடு கட்டி அவர்களை கஷ்ட்டப்படாமல் பாதுகொள்வேன்” என்றும் பேசியிருந்தார்.
இவர் பேச்சை கேட்டு, அமைச்சர் உட்பட பலரும் கண் கலங்கினர். இந்த நிலையில், அந்த குடுப்பத்திற்கு “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடு கட்டி தர முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்.உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.