கோல்ஃப் மைதானத்தில் டிரம்பை கொல்ல முயற்சி: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அவரது கோல்ஃப் மைதானத்தில் சுட்டுக் கொல்ல முயன்ற வழக்கில், ரியான் ரூத் (59) என்ற நபர் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், தீர்ப்பு வெளியானதும் நீதிமன்றத்தில் அவர் தனக்குத்தானே கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நடந்த பகீர் சம்பவங்கள் மற்றும் வழக்கு விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.

கடந்த 2024 செப்டம்பர் 15ஆம் தேதி, புளோரிடாவில் உள்ள டிரம்பின் கோல்ஃப் மைதானத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. டிரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, ரியான் ரூத் துப்பாக்கியுடன் அவரை இலக்கு வைத்திருக்கிறார். அப்போது, மறைந்திருந்த ரகசிய சேவை அதிகாரி ஒருவர் உடனடியாக ரூத்தை நோக்கி சுட்டதில், அவர் தனது துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். அதே நாளிலேயே ரூத் கைது செய்யப்பட்டார்.

ரியான் ரூத் மீது கீழ்க்கண்ட கடுமையான ஐந்து குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன:

  1. ஒரு முக்கிய ஜனாதிபதி வேட்பாளரைக் கொல்ல முயற்சி.
  2. ஒரு கூட்டாட்சி அதிகாரியைத் தாக்கியது.
  3. குற்றவாளியாக இருந்த நிலையில், துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்தது.
  4. அழிக்கப்பட்ட வரிசை எண் கொண்ட துப்பாக்கியை வைத்திருந்தது.
    இந்தக் குற்றங்களுக்காக, அவருக்கு டிசம்பர் 18ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்படும். கொலை முயற்சி குற்றத்திற்காக அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் அதிர்ச்சி சம்பவம்:

இந்த வழக்கில், குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே, ரியான் ரூத் தனது கையில் இருந்த பேனாவை எடுத்து தனக்குத்தானே கழுத்தில் குத்திக்கொள்ள முயற்சி செய்ததாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FBI முன்வைத்த வலுவான ஆதாரங்கள்:

இந்த வழக்கில் ரூத்துக்கு எதிராக வலுவான ஆதாரங்களை FBI முன்வைத்தது. சம்பவத்திற்கு முன்னதாக, ரூத் பல மணி நேரம் கோல்ஃப் கிளப் அருகே இருந்ததை அவரது செல்போன் தரவுகள் காட்டின. மேலும், அவரது கூகுள் தேடல் வரலாற்றில் ‘டிரம்பின் அடுத்த பேரணிகள்’, ‘பாம் பீச் போக்குவரத்து கேமராக்கள்’ போன்ற தேடல்கள் பதிவாகியிருந்தன. அதேபோல், தப்பித்துச் செல்வதற்காக மெக்சிகோவுக்கு விமானம் குறித்த தகவல்களையும், அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகள் பற்றியும் அவர் தேடியுள்ளார்.

வாதப் பிரதிவாதங்கள்:

இறுதி வாதத்தில், ரூத் தானே வாதிடுகையில், “கொலை முயற்சி நடக்கவே இல்லை. ஒருவேளை அது நடக்கவில்லை என்றால், அதற்கு எந்த நோக்கமும் இல்லை,” என்று கூறினார். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், “கொலை முயற்சிக்கு, குற்றத்தைச் செய்து முடிக்க வேண்டிய அவசியம் இல்லை. கொலை செய்யும் நோக்கம் இருந்தாலே போதும்,” என்று வலுவாக வாதிட்டு வழக்கை வென்றனர்.

இந்தத் தீர்ப்பு அமெரிக்க அரசியலிலும், சட்ட வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News