உங்கள் வங்கிக் கணக்கை ஒரே மெசேஜில் காலி செய்யும் வாட்ஸ்அப் மோசடி! தப்பிப்பது எப்படி?

நாம் தினமும் காலையில் எழுந்ததும் முதலில் பார்க்கும் செயலிகளில் வாட்ஸ்அப் முன்னிலையில் உள்ளது. ஆனால், இனிமேல் வாட்ஸ்அப் வழியாக வரும் ஒவ்வொரு மெசேஜையும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். காரணம், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் காலி செய்வதற்கு, இணையக் குற்றவாளிகள் புதியதொரு ஆபத்தான வழியைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் வாட்ஸ்அப் ஃபிஷிங் மோசடி (Phishing Scam).

இது ஏதோ சாதாரண மெசேஜ் அல்ல. பார்ப்பதற்கு அச்சு அசலாக அரசாங்க அலுவலகங்களில் இருந்தோ அல்லது உங்கள் வங்கியிலிருந்தோ வருவது போலவே தோன்றும். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம், இந்த மோசடி எவ்வளவு ஆபத்தானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. 72 வயதான ஓய்வுபெற்ற ஒரு மூத்த குடிமகன், தன்னுடைய வாட்டர் பில் செலுத்துவதற்காக வெறும் 13 ரூபாய் ஆன்லைனில் கட்ட முயன்று, தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை மொத்தமாக இழந்திருக்கிறார். இது எப்படி நடந்தது? இந்த வகையான மோசடிகளில் இருந்து நாம் எப்படித் தப்பிப்பது? விரிவாகக் காண்போம்.

முதலில் ஹைதராபாத்தில் அந்தப் பெரியவருக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். அவருக்கு வாட்டர் போர்டில் இருந்து வாட்ஸ்அப் வழியாக ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில் வாட்டர் போர்டின் அசல் லோகோ போன்ற படமும் இருந்திருக்கிறது. “உங்கள் வாட்டர் பில் அப்டேட் செய்ய வேண்டும், அதற்கு டோக்கன் கட்டணமாக வெறும் 13 ரூபாய் மட்டும் இந்த லிங்க்கைக் கிளிக் செய்து கட்டுங்கள்” என்று அதில் சொல்லப்பட்டிருந்தது.

அவரும், அரசாங்கத்திடம் இருந்துதான் மெசேஜ் வந்திருக்கிறது என்று நம்பி, அந்த லிங்க்கைக் கிளிக் செய்திருக்கிறார். 13 ரூபாய் கட்ட முயற்சி செய்த சில விநாடிகளில், அவருடைய போன் மொத்தமாக ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில், அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து அடுத்தடுத்து பத்து முறை பணம் எடுக்கப்பட்டு, மொத்தமாக 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் காலி! வெறும் 13 ரூபாய் என்ற சிறிய தொகையை ஆசைகாட்டி, லட்சக்கணக்கில் பணத்தைத் திருடியிருக்கிறார்கள். இதுதான் ஃபிஷிங் மோசடியின் கொடூரமான முகம்.

ஃபிஷிங் மோசடி: எப்படி தூண்டில் போடுகிறார்கள்?

ஃபிஷிங் என்பது தூண்டில் போட்டு மீன் பிடிப்பது போன்றது. நமது நம்பிக்கையையும், அவசரத்தையும் பயன்படுத்தி, நம்மிடமிருந்தே தகவல்களைத் திருடுவதுதான் இவர்களின் வேலை. அவர்கள் கையாளும் முக்கிய தந்திரங்கள் இதோ:

1.அச்சு அசலான போலி மெசேஜ்: அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள், கேஸ் நிறுவனங்கள், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்களின் லோகோவை அப்படியே காப்பி செய்து, அவர்கள் அனுப்புவது போன்றே மெசேஜ்களை அனுப்புவார்கள்.

2.அவசரப்படுத்துதல்: “உங்கள் கரண்ட் பில் கட்டவில்லை என்றால் இன்று இரவே இணைப்பு துண்டிக்கப்படும்”, “உங்கள் வங்கிக் கணக்கு பிளாக் ஆகப்போகிறது, உடனே அப்டேட் செய்யுங்கள்” என்று கூறி நம்மை அவசரப்படுத்துவார்கள்.

3.ஆசை காட்டுதல்: “உங்களுக்கு லாட்டரி விழுந்திருக்கிறது”, “உங்களுக்கு இலவச ரீசார்ஜ்” என்று சொல்லி ஆசை வலை விரிப்பார்கள்.

4.தீங்கிழைக்கும் லிங்க்கள்: ஒரு சிறிய லிங்க்கை அனுப்பி, அதை கிளிக் செய்யச் சொல்வார்கள். அந்த லிங்க் ஒரு போலி வெப்சைட்டுக்கு உங்களைக் கூட்டிச் செல்லும். அங்கு நீங்கள் உங்கள் வங்கி விவரங்களைக் கொடுத்தால், மொத்தமும் திருடு போய்விடும்.

5.OTP கேட்டல்: “பாதுகாப்பிற்காக உங்கள் OTP-யைச் சொல்லுங்கள்” என்று கேட்பார்கள். OTP என்பது உங்கள் பணப்பெட்டியின் சாவி போன்றது. அதை யாரிடமும் கொடுக்கவே கூடாது.

  1. வெளிநாட்டு நம்பர் மிஸ்டு கால்: வெளிநாட்டு நம்பரில் இருந்து மிஸ்டு கால் கொடுத்து, நாம் திரும்பக் கூப்பிட்டால், நம்முடைய மொபைல் பேலன்ஸ் காலியாகிவிடும்.

அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கைகள்:

இந்த மாதிரியான மோசடிகள் அதிகமாகி வருவதால், மத்திய உள்துறை அமைச்சகம் இப்போ ஒரு பெரிய அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த வருடம் மட்டும், சைபர் கிரைமுக்கு பயன்படுத்தப்பட்ட 7 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளை பிளாக் செய்துள்ளனர். 83,000 வாட்ஸ்அப் கணக்குகளையும், 3,000 ஸ்கைப் ஐடிக்களையும் முடக்கியிருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், நமக்காகவே ஒரு ஸ்பெஷல் ஹெல்ப்லைன் நம்பரையும் கொடுத்திருக்கிறார்கள். அந்த நம்பர் 1930. உங்களுக்கு ஏதாவது பண மோசடி நடந்தால், உடனே இந்த நம்பருக்கு கால் செய்யலாம். இல்லையென்றால், www.cybercrime.gov.in என்ற வெப்சைட்ல போய் புகார் கொடுக்கலாம். “ஸ்கேம் சே பச்சோ” (Scam Se Bacho) போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் அரசாங்கம் நடத்தி வருகிறது.

அரசாங்கம் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும், நம் பாதுகாப்பு நம் கையில்தான் இருக்கிறது. இந்த மோசடியிலிருந்து தப்பிக்க சில எளிய வழிகள்:

1.அறியாத லிங்க்குகளை நம்பாதீர்கள்: தெரியாத நம்பரில் இருந்தோ, சந்தேகப்படும்படியான மெசேஜில் இருந்தோ வரும் எந்த லிங்க்கையும் தொடவே தொடாதீர்கள்.

2.நேரடியாக சரிபார்க்கவும்:உங்கள் வங்கியில் இருந்தோ, மின்சார வாரியத்திடமிருந்தோ மெசேஜ் வந்தால், உடனே அந்த லிங்க்கை கிளிக் செய்யாமல், நீங்கள் நேரடியாக கஸ்டமர் கேருக்கு போன் செய்து, “இந்த மாதிரி மெசேஜ் வந்துச்சே, உண்மையா?” என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மெசேஜில் உள்ள நம்பரை அழைக்காமல், அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது பில்லில் உள்ள எண்ணை அழைக்கவும்.

3.OTP-யைப் பகிராதீங்க:போனில் கூப்பிட்டு, “நான் வங்கியில் இருந்து பேசுகிறேன், உங்கள் OTP சொல்லுங்க” என்று யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள். எந்த வங்கியும் உங்கள் OTP-யை போனில் கேட்காது.

4.சந்தேகப்படும் கணக்குகளை புகார் செய்யவும்: வாட்ஸ்அப்பிலேயே சந்தேகப்படும்படியாக இருக்கும் அக்கவுண்ட்டை ரிப்போர்ட் மற்றும் பிளாக் செய்வதற்கு ஆப்ஷன் உள்ளது. அதைப் பயன்படுத்துங்கள்.

5.உடனடியாக புகார் செய்யுங்கள்: ஒருவேளை நீங்கள் ஏமாந்து பணத்தை இழந்துவிட்டால், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், உடனே 1930 என்ற நம்பருக்கு கால் செய்யுங்கள். எவ்வளவு சீக்கிரம் புகார் செய்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் நம் பணத்தைத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகம் நமக்கு எவ்வளவு வசதிகளைக் கொடுத்திருக்கிறதோ, அவ்வளவு ஆபத்துகளையும் உள்ளே வைத்துள்ளது. நாம் கொஞ்சம் உஷாராகவும், விழிப்புணர்வுடனும் இருந்தால், இந்த மாதிரியான திருடர்களிடம் இருந்து நம் பணத்தை சுலபமாக காப்பாற்றிக்கொள்ளலாம். அரசாங்கம் நமக்கு உதவுவதற்காக “சைபர்டோஸ்ட்” (CyberDost) என்று சமூக வலைத்தள பக்கங்களையும் நடத்துகிறது. அதையும் பின்தொடர்ந்து அப்டேட்டுகளுடன் இருங்கள்.

Related News

Latest News