இந்தியாவில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலான வேலையின்மை, பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வரும் வாக்குத் திருட்டின் நேரடி விளைவு என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
தனது எக்ஸ் பதிவில் அவர் கூறியதாவது, ‘ஒரு அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வந்தால், அதன் முதல் கடமை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக இருக்க வேண்டும். ஆனால், பாஜக தேர்தல்களில் நேர்மையாக வெற்றி பெறுவதில்லை. வாக்குகளைத் திருடியும், ஏஜென்சிகளை கட்டுப்படுத்தியும் தான் ஆட்சியில் நீடிக்கிறது. இதன் விளைவாக ஆள்சேர்ப்பு முறைகள் பாதிக்கப்பட்டு, வேலை வாய்ப்புகள் குறைந்து, இளைஞர்களின் எதிர்காலம் இருளில் தள்ளப்படுகிறது.
இளைஞர்கள் தினமும் உழைத்து, கனவுகளைப் பின்தொடர்கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி தனது பிரசாரம், பிரபலங்களைப் பயன்படுத்தி புகழ் பாடச் செய்வது, கோடீஸ்வரர்களின் நலன்களை பாதுகாப்பது ஆகியவற்றிலேயே கவனம் செலுத்துகிறார். இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்து, விரக்தியை உருவாக்குவதே இந்த அரசின் அடையாளமாக மாறிவிட்டது,’ என அவர் கடுமையாக விமர்சித்தார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற சிறப்பு திருத்தத்தில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை ராகுல் காந்தி சதி எனக் குறிப்பிட்டார். தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து வாக்குகளைப் பறிக்கும் முயற்சி நடக்கிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில், லட்சக்கணக்கான வாக்காளர்களை ஆன்லைன் மூலம் நீக்கும் மோசடியில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது என்றும், அந்த குழு பயன்படுத்திய மொபைல் எண்கள் மற்றும் ஓடிபி விவரங்களை தேர்தல் ஆணையம் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
