H-1B விசா என்பது குடியேற்றம் அல்லாத அனுமதி, அதாவது தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள் நுழைய மக்களுக்கு அனுமதி அளிக்கிறது. H-1B விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள் வசிக்கலாம் மற்றும் வேலை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது,
இந்த நிலையில் H-1B விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக அதிபர் டிரம்ப் உயர்த்தினார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ஆகும். முன்னதாக, ரூ.1.75 லட்ச மாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.இந்த கட்டணத்தை H-1B விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.குறிப்பாக H-1B விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து உள்ளது. இதற்கிடையே ஏற்கனவே H-1B விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் H-1B விசா கட்டண உயர்வில் இருந்து டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க பரீசிலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.H-1B விசா கட்டண உயர்வுக்கு பல்வேறு துறை நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் மருத்துவத்துறை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மிகப்பெரிய மருத்துவ அமைப்புகள் கவலைகளை தெரிவித்தன. இதையடுத்து விசா கட்டண உயர்வில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறும் போது, “அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளன. அதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
