இந்தியாவில் சுமார் 1.4 கோடி, அதாவது ஒரு கோடியே நாற்பது லட்சம் ஆதார் எண்கள் அதிரடியாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. இந்தச் செய்தியைக் கேட்டதும், உங்க ஆதார் கார்டு பத்திரமா இருக்கான்னு நீங்க பதட்டப்படத் தேவையில்லை. ஏனெனில், நீக்கப்பட்ட இந்த ஆதார் எண்கள் எல்லாம், ஏற்கனவே இறந்து போனவர்களுக்குச் சொந்தமானது!
ஆம், மத்திய மோடி அரசு ஒரு மிகப்பெரிய ‘மெகா தூய்மைப் பணியை’ தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத்தான், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
எதற்காக இந்த நடவடிக்கை? இதன் பின்னணியில் இருக்கும் நோக்கம் என்ன?
யோசித்துப் பாருங்கள், ஆதார் அட்டை என்பது இன்று வெறும் அடையாள அட்டை மட்டுமல்ல. 3,300க்கும் மேற்பட்ட அரசு நலத்திட்டங்கள் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. ரேஷன் பொருட்கள் வாங்குவது முதல், விவசாய மானியம், முதியோர் பென்ஷன் பணம் பெறுவது வரை எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம்.
கடந்த காலங்களில், இறந்து போனவர்களின் ஆதார் எண்களைப் பயன்படுத்தி, பல மோசடிகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகுதியே இல்லாதவர்கள், இறந்து போனவர்களின் பெயரில் அரசு சலுகைகளைப் பெற்று, மக்கள் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் சுரண்டியிருக்கிறார்கள். இந்த மாபெரும் ஊழலைத் தடுப்பதற்காகத்தான் இந்த மெகா ஆபரேஷன் தொடங்கப்பட்டுள்ளது.
UIDAI-யின் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஷ் குமார் சொல்வது போல, “இந்த நடவடிக்கை, நலத்திட்டங்கள் சரியான நபர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும். பொதுமக்களின் பணம் வீணாவதையும், அடையாள மோசடியையும் இது தடுக்கும்.”
இந்தத் திட்டம் இத்துடன் நிற்கப்போவதில்லை. டிசம்பர் 2025-க்குள், கிட்டத்தட்ட 2 கோடி இறந்தவர்களின் ஆதார் எண்களை செயலிழக்கச் செய்ய UIDAI இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால், இந்த மெகா ஆபரேஷனில் ஒரு மிகப்பெரிய சவாலும் இருக்கிறது. என்ன தெரியுமா?
நம் நாட்டில், ஒருவர் இறந்துவிட்டால், அவரது ஆதார் எண்ணை இறப்புச் சான்றிதழுடன் இணைப்பது கட்டாயமில்லை. இதனால், யார் இறந்து போனார் என்ற துல்லியமான தகவல் அரசிடம் உடனடியாகச் சென்று சேருவதில்லை. பல நேரங்களில், இறப்புப் பதிவுகளில் ஆதார் எண் தவறாகவோ அல்லது விடுபட்டோ இருக்கிறது. இந்தத் தகவல்கள் பல இடங்களில் சிதறிக் கிடப்பதால், அவற்றைச் சரிபார்ப்பது UIDAI-க்கு ஒரு பெரும் சவாலாக இருக்கிறது.
இந்தச் சிக்கலைத் தீர்க்க, UIDAI பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளது. உங்கள் குடும்பத்தில் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களில் யாராவது இறந்துவிட்டால், அந்தத் தகவலை mAadhaar போர்ட்டலில் பதிவு செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆக, இது ஆதார் கார்டை ஒழிக்கும் நடவடிக்கை இல்லை. மாறாக, ஆதார் அமைப்பை சுத்தப்படுத்தி, அதை மேலும் வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கை. இதன் மூலம், உண்மையான பயனாளிகளுக்கு அரசின் உதவிகள் தங்குதடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்ய முடியும்.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்கள் கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.
