திறமையான வெளிநாட்டவர்களுக்கு வாசல் திறக்கும் இங்கிலாந்து? விசா கட்டணம் அடியோடு ரத்து செய்யப்படுகிறதா?

சர்வதேச திறமையான நபர்களை ஈர்க்கும் நோக்கில், அவர்களுக்கான விசா கட்டணத்தை நீக்க இங்கிலாந்து அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் தற்காலிக வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் H1B விசா கட்டணம், ரூ.1.32 லட்சத்திலிருந்து திடீரென ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வந்தது. இதனால் புதிய விண்ணப்பதாரர்கள் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். தற்போது H1B விசா வைத்திருப்பவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதால், இந்த உயர்வு இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு என கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், உலகின் முன்னணி விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், டிஜிட்டல் வல்லுநர்களை ஈர்க்கும் நோக்கில் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான ஆலோசனைகள் நடப்பதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. முக்கிய பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் அல்லது சர்வதேச விருதுகள் பெற்றவர்களுக்கு விசா கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்யும் திட்டமும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இங்கிலாந்தில் விசா கட்டணம் ரூ.90,000 என்ற அளவில் உள்ளது.

அமெரிக்காவின் கட்டண உயர்வு, இந்திய திறமைமிக்கவர்களை தாய்நாட்டில் தங்க வைக்கும் வாய்ப்பாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் ஸ்டார்ட்-அப்கள், ஆராய்ச்சி மையங்கள் இந்தியாவில் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. ‘அமெரிக்காவின் இழப்பு, இந்தியாவின் ஆதாயமாகும்’ என பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ‘அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் துணிச்சலுடன் நாடு திரும்பி, வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பினால், அது அவர்களை வலுவானவர்களாக மாற்றும். இது ஒரு சிறந்த வாய்ப்பு’ எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News