நடுவானில் ட்ரம்பின் விமானத்தை நெருங்கிய மற்றொரு விமானம்! பதைபதைக்கும் மர்ம பின்னணி என்ன?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்புடன் பிரிட்டனுக்கு அரசுமுறை பயணமாக புறப்பட்டார். அப்போது அவர்களின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் வானில் பறந்துகொண்டிருந்த நேரத்தில் பரபரப்பு நிலை ஏற்பட்டது.

லாங் தீவு வான்வெளியில், ட்ரம்பின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்திற்கு அருகில் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் “ஸ்பிரிட் 1300” விமானம் எதிர்பாராதவிதமாக நெருங்கியது. இதனால் கட்டுப்பாட்டு அறையில் அதிர்ச்சி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபோர்ட் லாடர்டெல் நகரிலிருந்து பாஸ்டனுக்கு சென்று கொண்டிருந்த இந்த பயணிகள் விமானம், சாதாரண பாதையை விட்டு விலகி ட்ரம்பின் விமானத்திற்கு நெருக்கமாக வந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயம், நியூயார்க் டவர் விமான கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உடனடியாக எச்சரிக்கை விடுத்து, “20 டிகிரி வலதுபுறம் திரும்புங்கள்” என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் விமானிகள் உடனடியாக பதில் அளிக்காததால் பதற்றம் அதிகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இரண்டு விமானங்களுக்கும் இடையே சுமார் 8 முதல் 11 மைல் தூரம் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், இரு விமானங்களும் எந்த சிக்கலுமின்றி பாதுகாப்பாக தரையிறங்கின. ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் விதிமுறைகளின்படி, நியூயார்க் வான்வெளியில் குறைந்தது 1.5 மைல் இடைவெளியும், 500 அடி உயர வேறுபாடும் பின்பற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகள் விமானம் டிரம்ப் விமானத்தை நெருங்கி வந்த சம்பவத்தால் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கையில், “பயணிகள் பாதுகாப்பே எங்கள் மிக முக்கிய முன்னுரிமை. விமானம் வழக்கமான நடைமுறைகளையும், கட்டுப்பாட்டு உத்தரவுகளையும் பின்பற்றி பயணத்தை நிறைவு செய்தது” என்று கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News