சட்டம் அனைவருக்கும் சமம். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதற்கு பெரும் அளவில் பணம் மற்றும் பல காரணிகள் தேவைப்படுகின்றன. இதனால் ஏழைகள், பெண்கள், மூத்தோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியோர் பல நேரங்களில் நீதியைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள். இந்த பிரச்சினையை சமாளிக்க தமிழ்நாடு அரசு, மாநில சட்ட சேவை ஆணையம் அதாவது TNSLSA மூலமாக இலவச சட்ட ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்குகிறது.
தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் படி, நீதி மன்ற கட்டணம், சட்ட சிக்கல்களுக்கான இலவசப் பிரதிநிதித்துவம், கட்டணமின்றி சட்ட நடவடிக்கைகள் தொடர்பான உத்தவரவுகள் மற்றும் ஆவண நகல்களைப் பெறுதல், உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய விருப்பம் தெரிவித்தல், அச்சிடுதல் மற்றும் மொழிபெயர்த்தல் ஆகியவை ஒவ்வொரு மட்டத்திலும் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்படும் சட்ட சேவைகள் ஆகும். இது தவிர, முகாம்கள் மூலம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆலோசனைகள் வழங்குதல், தனி நபர்களுக்கு சட்ட உரிமைகளை கற்பிப்பதன் மூலம் அவர்களை மேம்படுத்துதல் ஆகியவற்றையும் மாநில மற்றும் மாவட்ட அமைப்புகள் மேற்கொள்ளவேண்டும்.
பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தோர், ஏழைகள், சாதி அல்லது இன அடிப்படையில் பின்தங்கியவர்கள், ஆண்டு வருமானம் குறைவானவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை தரப்படுகிறது. சேவையைப் பெற விரும்புவோர், அலுவலகங்களை நேரில் தொடர்புகொள்ளலாம் அல்லது toll-free எண் 1800-4252-441 மூலம் தொடர்பு கொள்ளலாம். அதன் மூலம் “Tele-Law” திட்டத்தின் மூலமும் சட்ட ஆலோசனை பெறலாம்.
இந்த இலவச சேவை குறித்து இன்னும் பலருக்கு தெரியாமல் உள்ளது. விழிப்புணர்வு அதிகரித்தால், நீதியை அனைவருக்கும் எளிதாகக் கொண்டுசெல்லும் ஒரு வலுவான கருவியாக இது மாறும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
