சென்னை அம்பத்தூரில் ஏடிஎம்மில் கருப்பு பிளாஸ்டிக் அட்டையை வைத்து நூதன திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பகுதியில் உள்ள ஏடிஎம்மில் விமசீலா என்பவர் பணம் எடுப்பதற்காக வந்துள்ளார். அப்போது அவர் பணம் எடுத்தபோது, பணம் வரவில்லை. ஆனால், பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி மட்டும் வந்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத அவர் ஏடிஎம் மெஷினில் பணம் வரும் இடத்தை பார்த்தபோது, அதில் மெல்லியதாக கருப்பு நிற பிளாஸ்டிக் அட்டையை வைத்து பணம் வெளியில் வராமல் தடுக்கப்பட்டது இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விமசீலா உடனடியாக காவல்துறை கட்டுபாட்டு அறையை அழைத்து புகார் அளித்தார். புகார் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எஸ்பிஐ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் முகப்பேர் கிழக்கில் இதுபோன்ற நூதன கொள்ளையில் ஈடுபட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
