விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் பூமியின் அருகில் சுற்றிவரும் புதிய ‘quasi-moon’ ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு 2025 PN7 என்று பெயரிடப்பட்டுள்ளது.
Quasi-moon என்பது நம்முடைய இயற்கை நிலா போல நேரடியாக பூமியைச் சுற்றுவதல்ல. ஆனால், பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் சூரியன் ஈர்ப்பு விசை ஆகியவற்றின் தாக்கத்தால், அது சில ஆண்டுகள் பூமியின் அருகே சுழன்று கொண்டிருக்கும் ஒரு சிறிய விண்கல் என்று சொல்லலாம்.
2025 PN7 சுமார் 19 மீட்டர் அதாவது 62 அடி அளவுள்ள asteroid என்று சொல்லப்படும் ஒரு சிறிய குறுங்கோள். பல ஆண்டுகளாக இது பூமியின் அருகில் இருந்திருந்தாலும், இதுவரை கண்டறியப்படவில்லை. சமீபத்திய உயர் திறன் கொண்ட தொலைநோக்கிகள் மற்றும் கண்காணிப்பு முறைகள் மூலம் இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது சில ஆண்டுகள் பூமியின் அருகில் quasi-orbit எனப்படும் பாதையில் தொடர்ந்து சுழலக்கூடும். பின்னர் அதன் பாதை மாறி, அது பூமியை விட்டு விலகிச் செல்லும் வாய்ப்பும் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம், இத்தகைய சிறிய விண்கற்கள் பூமியின் ஈர்ப்புவிசையுடன் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன. மேலும், எதிர்காலத்தில் விண்கல் பாதுகாப்பு ஆராய்ச்சிகளுக்கு இவை உதவக்கூடும்.
ஆனால், 2025 PN7 பூமிக்கு ஆபத்தான ஒன்றல்ல என்று விஞ்ஞானிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். இது முற்றிலும் இயற்கையான, ஆராய்ச்சி முக்கியத்துவம் கொண்ட நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
