ATM போகப் போறீங்களா? உங்கள் பணத்தை திருடும் புது வித மோசடி! உஷாரா இருங்க மக்களே!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், வங்கிகளிலிருந்து பணத்தை எளிதாகப் பெற ஏடிஎம் இயந்திரங்களை அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் அதே சமயம் சிலர் இதையே குறிவைத்து புதிய மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் அதிகம் பேசப்படும் ஒரு மோசடி முறையே “Cash trap scam”.

இந்த மோசடியில் ஒருவர் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது, இயந்திரம் செயல்பட்டாலும் பணம் வெளியே வருவதில்லை. வாடிக்கையாளர் நீண்ட நேரம் காத்திருந்து சோர்ந்து, பணம் வரவில்லை என நினைத்து வெளியேறுகிறார். ஆனால் உண்மையில், பணம் வெளியே வந்திருக்கிறது. ஆனால் “கேஷ் அவுட் ஸ்லாட்”-இல் கருப்பு நிற டேப் அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருள் ஒட்டப்பட்டிருப்பதால், அந்த பணம் உள்ளே சிக்கி விடுகிறது.

பின்னர் மோசடிக்காரர்கள் எளிதாக வந்து அந்த டேப்பை எடுத்து, சிக்கிய பணத்தை திருடிச் செல்கிறார்கள். இப்படி ஒரு சூழலில் பாதிக்கப்படுபவர் தன் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிட்டதை உணராமல், இயந்திரம் பழுதாக இருக்கலாம் என்று நினைத்து விலகிச் செல்கிறார்.

இதுபோன்ற மோசடிகளைத் தவிர்க்க சில முன்னெச்சரிக்கைகள் அவசியம். பணம் வரவில்லை என்றால் உடனே இயந்திரத்தை விட்டு செல்லாமல், ஸ்லாட் பகுதியை கவனமாகச் சோதிக்க வேண்டும். ஏடிஎம்-ல் சந்தேகத்துக்கிடமான பொருள் ஏதேனும் ஒட்டப்பட்டிருந்தால், அதை எடுக்காமல் வங்கிக்கு உடனடியாக தகவல் தர வேண்டும். எப்போதும் பரிவர்த்தனை ரஸீதை சரிபார்க்க வேண்டும்.

சந்தேகத்திற்கிடமான சூழலில் 24×7 வங்கி ஹெல்ப் லைனுக்கு புகார் செய்யலாம். பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையிலும் சிறு கவனக்குறைவால் பெரிய இழப்புகள் ஏற்படக்கூடும். ஆகவே எச்சரிக்கையாக இருந்து, பிறருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

Related News

Latest News