பெற்றோரை இழந்த குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ள, நான் இருக்கிறேன் என உறுதியளித்துள்ள மு.க.ஸ்டாலின், வாக்கு அரசியலுக்காக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை தரும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பு முடியும் வரை மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெற்றோரை இழந்த குழந்தைகள் இனிமேல் கவலைப்பட வேண்டாம், உங்களை கவனித்து கொள்ள நான் இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து குழந்தைகளுக்கு உதவித்தொகையை வழங்கினார். மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார்.
