மக்களாட்சி என்பது மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சி. இதில் சொல்லப்படும் ‘மக்கள்’ என்பது நாம் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. உலகின் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டடுள்ளது.
2007-ம் ஆண்டு, நவம்பர் 8-ம் நாள் ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தின்மூலம், இந்த மக்களாட்சி தினம் 192 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. மன்னராட்சி, குடியாட்சி, சர்வாதிகார ஆட்சி என எல்லாவற்றையும்விட மக்களாட்சி சிறப்பானது என்பதாலேயே, அநேக உலக நாடுகளில் மக்களாட்சி அமலில் உள்ளது.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகம் எனும் மக்களாட்சி முறை உலகில் தோன்றியது. 5 ம் நூற்றாண்டில் கிரேக்க ஏதென்ஸ் நகரில் ஜனநாயக உரிமைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. மக்களாட்சியின் பிறப்பிடம் கிரேக்கம் ஆகும்.
மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன. நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். 20 ம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப் படவில்லை.
இதற்கு காரணம், மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும். எனவே மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே தற்போது பின்பற்றப்படுகிறது.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து, வறுமை நீங்கி, அறியாமை விலகி, சமத்துவத்தோடு வாழ்வதே மக்களாட்சியின் நோக்கம். மக்களாட்சியில் ஆயிரம் குறைபாடுகள், குழப்பங்கள் இருந்தாலும், மாண்புமிக்க மக்களாட்சி முறை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களாட்சி தினமான இந்த நாளில், எந்தப் பரிசும் பணமும் பெறாமல், நேர்மையான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்போம்.
