தமிழக வெற்றி கழகம் அரசியல் அரங்கில் வலுவாக களம் இறங்கும் நோக்கில் தயாராகி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து தவெக அடுத்தடுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கட்சித் தலைவர் விஜய், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் நடத்த உள்ளார். செப்டம்பர் 13 அதாவது நாளை முதல் தொடங்கும் இந்த பயணம் 42 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள், மக்களுடன் நேரடி சந்திப்புகள் நடைபெற உள்ளன. மேலும், சனிக்கிழமை தோறும் மக்களை நேரில் சந்திக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், சமூக நலச் செயல்பாடுகள் மூலமாக மக்களிடம் நெருக்கம் பெற முயற்சி செய்யப்படுகிறது. ‘மக்கள் நலன் மீதும் கவனம் செலுத்தப்படும்’ என்ற தவெக-வின் முன்னெடுப்பு எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
கட்சியின் கொள்கைகள் வெளிப்படையாக மக்களுக்கு எடுத்துரைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் தனித்தனி திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல். இது வரை ஆட்சியில் இருந்த கட்சிகள் செய்யாத புதுமையான நலத்திட்டங்கள் இருந்தால் மட்டுமே மக்களை கவரும் என்பது உறுதி.
தமிழக வெற்றி கழகம் மக்கள் மத்தியில் வலிமையான கட்சியாக உயர வேண்டும் என்றால், அவர்கள் வகுக்கும் செயல் திட்டங்கள் மக்கள் வாழ்வை நேரடியாகத் தொடும் வகையில் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம், இளைஞர் மேம்பாடு போன்ற அடிப்படை தேவைகளுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகள் நலன், தொழிலாளர்கள் உரிமை ஆகிய துறைகளில் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். மேலும், மக்களிடம் எளிமையாக சென்றடையும் வகையில் நேரடி சந்திப்புகள், வெளிப்படையான உரையாடல்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இப்படிப் பட்ட நிலையான, நம்பிக்கையூட்டும் செயல் திட்டங்களே தவெக-க்கு மக்கள் மனதில் வலுவான அடையாளத்தையும் அரசியல் நிலைத்தன்மையையும் உருவாக்கித் தரும். இவற்றை தவெக செய்யுமா என்ற கேள்விக்கு இன்னும் சில மாதங்களில் விடை தெரிந்துவிடும்.