ஐரோப்பா கண்டமே தற்போது ஒருவிதமான பதட்டத்தில் உறைந்திருக்கிறது. ரஷ்யாவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று ஒட்டுமொத்த உலகமும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது. நேட்டோ அமைப்புக்குள் ரஷ்யா நேரடியாக ஊடுருவியதால், பிரான்ஸ் எடுத்திருக்கும் ஒரு அதிரடி முடிவு, நிலைமையை இன்னும் தீவிரமாக்கியுள்ளது. பிரான்ஸின் இந்த பதிலடியால், ரஷ்யா மற்றொரு போரை அறிவிக்குமா? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
ஐரோப்பிய நாடான போலந்தின் வான் எல்லைக்குள் ரஷ்யாவின் உளவு ட்ரோன்கள் திடீரென ஊடுருவியுள்ளன. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் அதே நேரத்தில், நேட்டோ உறுப்பு நாடான போலந்துக்குள் ரஷ்யா ட்ரோன்களை அனுப்பியது, ஒரு நேரடி ஆத்திரமூட்டும் செயலாகவே பார்க்கப்படுகிறது. போலந்து ராணுவம் உடனடியாக செயல்பட்டு, சுமார் 16 ரஷ்ய ட்ரோன்களை இடைமறித்து தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தால் போலந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த நேட்டோ நாடுகளும் அதிர்ச்சியில் உறைந்தன.
இந்த சூழ்நிலையில்தான், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். போலந்தின் வான்பரப்பையும், நேட்டோவின் கிழக்கு எல்லைப் பகுதியையும் பாதுகாக்க, பிரான்ஸ் தனது அதிநவீன மூன்று ரஃபேல் போர் விமானங்களை உடனடியாக போலந்திற்கு அனுப்புவதாக அவர் அறிவித்துள்ளார்.
“போலந்தில் ரஷ்ய ட்ரோன்கள் ஊடுருவியதைத் தொடர்ந்து, எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து போலந்தின் வான்வெளியைப் பாதுகாக்க, மூன்று ரஃபேல் விமானங்களை அனுப்ப முடிவு செய்துள்ளேன். ஐரோப்பாவின் பாதுகாப்புதான் எங்களின் முதல் முன்னுரிமை. ரஷ்யாவின் இந்த மிரட்டல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்” என்று மக்ரோன் தனது X தளத்தில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.
இது வெறும் அறிவிப்பு மட்டுமல்ல. இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு, பிரான்ஸ் அதிபர் மக்ரோன், போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் ஆகியோருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இது நேட்டோ நாடுகளின் ஒரு கூட்டு முடிவாகவே பார்க்கப்படுகிறது.
இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த போலந்து, நேட்டோ ஒப்பந்தத்தில் இருக்கிற ‘பிரிவு 4’-ஐ (Article 4) பயன்படுத்தியுள்ளது. இது ஒரு அபாய சங்கு போன்றது. ஒரு உறுப்பு நாட்டுக்கு ஆபத்து என்று தெரிந்தால், இந்த பிரிவைப் பயன்படுத்தி மற்ற எல்லா உறுப்பு நாடுகளையும் அவசர ஆலோசனைக்கு அழைக்கலாம். போலந்து அந்த அபாய சங்கை இப்போது ஒலிக்கச் செய்துள்ளது.
நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு போலந்து தலைவர்களின் பேச்சே சாட்சி. போலந்தின் பிரதமர் டொனால்ட் டஸ்க், “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, போலந்து ஒரு போருக்கு இவ்வளவு நெருக்கத்தில் இருந்ததில்லை. தனது விரோத எண்ணங்களை மறைக்காத ஒரு எதிரியை நாம் எதிர்கொண்டுள்ளோம்” என்று மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
யோசித்துப் பாருங்கள், 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு, பிரான்ஸ் தனது போர் விமானங்களை ஒரு நேட்டோ நாட்டுக்காக நேரடியாக களமிறக்குவது இதுவே முதல் முறை. இது பிரான்ஸின் நேரடி ராணுவப் பங்களிப்பாகும்.
ரஃபேல் விமானங்கள் போலந்து வான்பரப்பில் பறக்கத் தொடங்கியுள்ளன. நேட்டோவின் படைகள் கிழக்கு எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன. ரஷ்யா அமைதியாக இருக்குமா? அல்லது இது ஒரு பெரிய போருக்கான ஆரம்பப் புள்ளியாக அமையுமா? நேட்டோவின் இந்த ஒன்றுபட்ட சக்தி, ரஷ்யாவை பின்வாங்க வைக்குமா?
என்பவைல்லாம் இப்போது பொதுவான கேள்விகளாக இருக்கிறது.