திண்டுக்கல் அருகே 50 அடி ஆழம் வரை சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 லாரி மற்றும் 2 பொக்லைன் இயந்திரங்களை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் மா.மு கோவிலூர் கிராமத்தில் கோயிலுக்கு சொந்தமான குளத்தில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்று வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தொலைபேசி வாயிலாக புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் பெயர் அளவில் கோயில் குளத்தினை ஆய்வு செய்துள்ளனர். ஆனால், மீண்டும் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை சிறைப்பிடித்தனர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், தற்போது வரை போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.