தங்கம் மனிதர்களின் வாழ்வில் மங்காத மகிமையுடன் இணைந்த ஒரு மதிப்புமிக்க உலோகம். ஆனால், அதன் விலை உயர்வால் பலர் முழுத் தூய தங்கத்தை அதாவது 24 அல்லது 22 காரட் தங்கத்தை வாங்குவது எட்டா கனியாகி வருகிறது. இதற்கு ஒரு நடைமுறைத் தீர்வாக அறிமுகமானது தான் 9 காரட் தங்கம்.
9 காரட் தங்கம் என்றால் என்ன என்பதை பார்க்கலாம். தங்கத்தின் தூய்மை காரட் அளவில் அளக்கப்படுகிறது. 24 காரட் என்றால் 100% தூய தங்கம். ஆனால் 9 காரட் தங்கத்தில், 37.5% மட்டுமே தூய தங்கம் இருக்கும். மீதமுள்ள 62.5% வெள்ளி, செம்பு, துத்தநாகம் போன்ற பிற உலோகங்களாக இருக்கும். இதனால் தங்கத்தின் விலை குறையும், மேலும் அதின் வலிமை அதிகரிக்கும்.
மேலும் 9 காரட் தங்கத்துக்கு சில சிறப்பம்சங்கள் உண்டு. குறைந்த அளவு தங்கம் கலக்கப்படுவதன் காரணமாக, 18 காரட் அல்லது 22 காரட்-ஐ விட மலிவான விலையில் கிடைக்கும். ஆனால் பிற உலோகங்கள் கலந்திருப்பதால், தினசரி அணிவதற்கு ஏற்ற வலிமையை பெறுகிறது. மட்டுமல்லாமல் நவீன வடிவங்களில், ஸ்டைலான ஆபரணங்களாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. கலக்கப்பட்ட உலோகங்களின் அடிப்படையில் மஞ்சள், வெள்ளை, ரோஸ் Gold போன்ற வண்ணங்களில் தயாரிக்க முடியும் என்பது Plus Point.
ஆனால், 9 காரட் தங்கத்தில் தூய தங்க கலப்பு குறைவாக இருப்பதால், மீள்விலை அதாவது resale value குறைவாக இருக்கும். மேலும், பாரம்பரியமாக 24 அல்லது 22 காரட் தங்கம் வாங்கும் இந்தியர்களுக்கு இது விரும்பத்தக்க ஒன்றாக இருக்காது. விலைச் சிக்கனமாகவும், அழகிய வடிவமைப்புகளுடன் கூடிய தினசரி அணிகலன்களை நாடுவோருக்கு 9 காரட் தங்கம் சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் முதலீட்டு நோக்கத்துடன் தங்கம் வாங்குபவர்கள் 18 அல்லது 22 அல்லது 24 காரட் தங்கத்தை தேர்வு செய்யலாம்.
