Wednesday, September 10, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை – அண்ணாமலை கண்டனம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, நேற்றைய தினம், திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுகவின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நடத்த, ஊரை அடித்து உலையில் போட்டிருக்கும் திமுகவினருக்குச் சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு.

திமுகவின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News