குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி பதவி விலகியதைத் தொடர்ந்து மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநரான, தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களமிறக்கப்பட்டார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
பெரும்பான்மைக்கு 385 வாக்குகள் தேவையான நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றிப்பெற்றார். இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார். இதற்கிடையே, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 14 எம்.பி.க்கள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 427 எம்.பி.க்கள் ஆதரவு உள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், கூடுதலாக 14 வாக்குகள் கிடைத்துள்ளதால், இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மாறி வாக்களித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.