நெல்லையில் ‘ஸ்காலர்ஷிப்’ என ஆசைவார்த்தை கூறி வங்கி கணக்குகளில் இருந்து பணம் திருடப்படும் சம்பவம் குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதாகக் கூறி நடைபெறும் மோசடி தொடர்பாக வாரத்திற்கு 4 முதல் 5 புகார்கள் வரை வந்து கொண்டிருக்கின்றன. பலர் பணத்தை இழந்து வருகின்றனர். எனவே, பெற்றோரும் மாணவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அவரவர் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதுதொடர்பாக வெளிநபர்கள் யாரேனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விவரங்கள், ஓ.டி.பி., பின் நம்பர், ஏ.டி.எம். கார்டு எண்கள் போன்றவற்றை கேட்டால் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடி முயற்சிகள் குறித்து 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.