தமிழ்நாடு சைபர் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் அண்மை காலமாக இரு வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-சலான்களை வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது
வாகனங்கள் விதிமுறை மீறினால் இ-சலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்தத் துறையும் அனுப்புவது கிடையாது.ஆனால் மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-சலான்களை அனுப்புகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் பாா்த்து பொதுமக்கள் பயந்து, அதில் வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை தொட்டு, பின் தொடா்வதால் மோசடி நபா்கள், பொதுமக்களிடம் வங்கிக் கணக்குகளின் விவரங்களையும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய ரகசிய எண்ணையும் பெற்று பணத்தை அபகரிப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல மோசடி நபா்கள், சமூக ஊடகங்களில் சைபா் உதவி மையம் என்ற பெயரில் போலியான விளம்பரம் செய்து, பொதுமக்களைத் தொடா்புகொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
பொதுமக்கள் சைபா் குற்றம் தொடா்பாக புகாா் அளிக்க, சைபா் குற்றப்பிரிவை 1930 என்ற இலவச தொலைப்பேசி எண் மூலம் தொடா்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.