நீங்கள் ஆண்ட்ராய்டு அலைபேசி பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், ஒரு நிமிடம் உங்கள் காதுகளைக் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். இது உங்களுக்கான ஒரு மிக மிக முக்கியமான எச்சரிக்கை!
இந்தியாவின் சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான CERT-In, இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு “அதிகபட்ச ஆபத்து” எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் சில மிக மோசமான பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள், அதாவது இணையத் திருடர்கள், மிக எளிதாக உங்கள் அலைபேசியை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்.
அப்படி நடந்தால் என்னென்ன ஆபத்துகள் ஏற்படும்?
உங்கள் வங்கிக் கணக்கு கடவுச்சொற்கள், தனிப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள், வாட்ஸ்அப் செய்திகள் என அனைத்தையும் அவர்களால் திருட முடியும்.
உங்கள் அலைபேசியின் கட்டுப்பாட்டை முழுமையாக எடுத்துக்கொண்டு, உங்கள் பெயரில் யாருக்கு வேண்டுமானாலும் அவர்களால் செய்தி அனுப்ப முடியும்.
தீங்கிழைக்கும் மென்பொருட்களை (Malicious Software) உங்கள் அலைபேசியில் நிறுவி, அதை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்ய முடியும். உங்கள் அலைபேசியை நீங்களே பயன்படுத்த முடியாதபடி முடக்கிவிடவும் முடியும்.
இந்த ஆபத்து, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் அலைபேசிக்கு மட்டும் அல்ல. சாம்சங், சியோமி, ஒன்பிளஸ், ரியல்மீ, விவோ, ஒப்போ, மோட்டோரோலா மற்றும் கூகுள் பிக்சல் என இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களின் அலைபேசிகளும் இந்த ஆபத்தில் உள்ளன.
ஆண்ட்ராய்டு 13, 14, 15 மற்றும் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு 16 வரை, அனைத்துப் பதிப்புகளிலும் இந்தக் குறைபாடு இருப்பதாக CERT-In எச்சரித்துள்ளது.
சரி, இந்த மிகப்பெரிய ஆபத்திலிருந்து உங்களையும், உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாத்துக்கொள்வது எப்படி?
பயப்பட வேண்டாம். தீர்வு மிகவும் எளிமையானது. உங்கள் அலைபேசி நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய மென்பொருள் புதுப்பிப்பை (Software Update) நீங்கள் உடனடியாக நிறுவ வேண்டும்.
அதை எப்படிச் செய்வது?
உங்கள் அலைபேசியின் ‘Settings’ பகுதிக்குச் செல்லுங்கள்.
அதில், ‘About Phone’ அல்லது ‘Software Update’ என்ற பகுதியைத் தேடித் திறங்கள்.
அங்கே, ‘Download and Install’ அல்லது ‘Check for Updates’ என்று ஒரு தெரிவு இருக்கும். அதை அழுத்துங்கள்.
புதிய புதுப்பிப்பு வந்திருந்தால், அதை உடனடியாகத் தரவிறக்கம் செய்து, உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளுங்கள். உங்கள் அலைபேசி பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, அதே செட்டிங்ஸ் பகுதியில், ‘Android Security Update’ அல்லது ‘Security Patch Level’ என்ற இடத்தைப் பாருங்கள்.
அந்தத் தேதி, ‘2025-09-01’ அல்லது ‘2025-09-05’ என்று இருந்தால், உங்கள் அலைபேசி பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தம். இல்லை என்றால், நீங்கள் உடனடியாகப் புதுப்பிக்க வேண்டும். மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ‘Play Protect’ என்பதை எப்போதும் இயக்கி வையுங்கள். அறிமுகமில்லாத இணையதளங்களிலிருந்து எந்த ஒரு செயலியையும் (App) தரவிறக்கம் செய்யாதீர்கள்.