ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்தது. இந்த நடைமுறை இன்று (27-ந்தேதி) அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
25 சதவீத கூடுதல் வரியால், இந்தியாவுக்கு என்னென்ன பாதிப்புகள்?
இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் 8,730 கோடி அமெரிக்க டாலர் மதிப்புடைய பொருட்களுக்கு 50 சதவீதம் வரிவிதிப்பு எடுக்கும் திட்டம் உள்ளது. இதனால், ஆடைகள், ரத்தினங்கள், நகைகள், கடல் உணவுப் பொருட்கள் மற்றும் தோல் சார்ந்த துறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.
அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள், மின்னணு சாதனங்கள் மற்றும் மொபைல் போன்கள் (ஆப்பிள் ஐபோன் போன்றவை) இந்த வரிவிதிப்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.
10% முதல் 25% வரை வரிவிதிப்புள்ள அண்டை நாடுகளின் ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது, இந்திய ஏற்றுமதியாளர்கள் போட்டியில் சிக்கல் பட வேண்டிய சூழல் உருவாகும். இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதாக உள்ளது.
இதேபோன்று 2026 நிதியாண்டில் 0.2 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.