‘ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தப்போகிறேன்’ என்று களத்தில் குதித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிடமிருந்து பல்வேறு கட்ட அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இருந்தபோதிலும் ரஷ்யா, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் 5 சதவீத தள்ளுபடியில் தொடரும் என்று கூறியுள்ளது. இதனை இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி அளிக்கிறது என்பது இந்தியா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இதனால், ரஷ்யாவிலிருந்து தொடர்ச்சியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிப்புடன், மொத்தம் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்து நெருக்கடி கொடுத்தது.
இந்த சூழலில், இந்தியாவுக்கான ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா நேற்று, ‘அமெரிக்காவிடமிருந்து கடுமையான அழுத்தங்களும் தடைகளும் இருக்கும் நேரத்திலும் இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும். தள்ளுபடிகளைப் பொறுத்தவரை அது ஒரு வர்த்தக ரகசியம். ஆனாலும், பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டு தள்ளுபடியின் அளவு 5 சதவீதமாக இருக்கும்’ என்று கூறியிருக்கிறார். இது, இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஆதரவான ரஷ்யாவின் துணிச்சலான முடிவாகவே பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ரஷ்ய துணைத் தூதரக தலைவர் ரோமன் பாபுஷ்கின் கூறும் போது, ‘தற்போது இந்தியா சவாலான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டுள்ளது. இருப்பினும், எங்களது உறவில் நம்பிக்கை உள்ளது. வெளிப்புறமான அழுத்தங்கள் இருந்தபோதிலும் இந்தியா-ரஷ்யா இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு தொடரும்’ என உறுதியளித்துள்ளார்.