தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகள் நலனுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் படி, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்து இருந்தால் அந்த குழந்தையின் பெயரில் நிலையான வைப்பு தொகையாக 50,000 ரூபாய் வரவு வைக்கப்படும்.
இந்த வைப்பு தொகை ரசீது நகல் அந்த பெண் குழந்தையின் பெயரில் அந்த குடும்பத்திடம் கொடுக்கப்படும். அந்த பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும்போது இந்த பணத்தை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருந்தால் அந்த பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வாய்ப்பு தொகையாக தலா 25 ஆயிரம் வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க செய்ய பெற்றோரில் ஒருவர் அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும், இவர்கள் யாரேனும் ஒருவர் அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்ததற்கான சான்று பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு பெண் குழந்தை மட்டுமே இருக்க வேண்டும், ஆண் வாரிசு இருக்கக் கூடாது.
குடும்பத்தின் வருட வருமானம் ரூ.1,20,000 க்குள் இருக்க வேண்டும். இரண்டாவது குழந்தைக்கு மூன்று வயது நிறைவடைவதற்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஒரே குழந்தை என்றால் அந்த குழந்தைக்கு மூன்று வயது முடிவதற்குள் விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
பொது சேவை மையங்களில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். மேற்குறிப்பிட்ட தகுதிகளுக்கான சான்றிதழ்கள் கேட்கப்படும். இதனை தொடர்ந்து விண்ணப்பம் செய்யப்பட்டதற்கான ரசீது உங்களுக்கு வழங்கப்படும். இதனை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். வேறு வகையில் விண்ணப்பிக்க, வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
விண்ணப்பம் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் நீங்கள் தொடர்புகொள்ளப்படுவீர்கள். மட்டுமல்லாமல், தற்போது தமிழ்நாடு அரசு நடத்தி வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமிலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.