Thursday, August 14, 2025
HTML tutorial

கூட்டணியில் குழப்பம், அதிமுகவின் போக்கு சரியில்லை : மைத்ரேயன் அடுக்கடுக்கான புகார்

கடந்த 1991-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த மைத்ரேயன் தொடர்ந்து 1999-ம் ஆண்டு வரை அக்கட்சியில் பயணித்தார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று மைத்ரேயன் அதிமுகவில் இணைந்தார்.

2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கிவைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார்.

இதையடுத்து, கடந்த 2024 ஆண்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மைத்ரேயன் அதிமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். இந்நிலையில் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மைத்ரேயன் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகப்பெரிய முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது. கல்வி, சமுதாய முன்னேற்றம், தனிநபர் வருமானம், பொருளாதார வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னனி மாநிலமாக இருக்கிறது.

அதிமுகவின் தற்போதைய போக்கு சரியாக இல்லை. அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவிக்காமல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்கிறார். அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறார். ஆனால் ஈபிஎஸ் கூட்டணி ஆட்சி இல்லை என்கிறார்.

அதிமுகவின் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய ஸ்விட்ச் போர்டாக டெல்லி இருக்கிறது. டெல்லி என்ன சொல்கிறதோ, அதற்கு கட்டுப்படுபவர்களாகத்தான் அதிமுக தலைமை இருக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் நிலவி வருகிறது. எனக்கு அமைப்புச் செயலாளர் பதவியை கொடுத்தார்கள். ஆனால் என்னை பயன்படுத்திக்கொள்ளவில்லை; இதனாலே திமுகவில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News