அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த மைத்ரேயன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கும் என மைத்ரேயன் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் இன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.
இதையடுத்து அதிமுகவில் இருந்து மைத்ரேயன் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், மைத்ரேயன், Ex. M.P., கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.