அமெரிக்கா ஒரு அமைப்பை ‘தீவிரவாத அமைப்பு’ என்று முத்திரை குத்திவிட்டால், அதன் நிலைமை தலைகீழாக மாறிவிடும். இப்போது அப்படியொரு நிலைமைதான், பாகிஸ்தானின் மிக முக்கியமான ஒரு பகுதிக்கு ஏற்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் பல ஆண்டுகளாகப் போராடி வரும் ‘பலூசிஸ்தான் விடுதலை ராணுவம்’ மற்றும் அதன் துணை அமைப்பான ‘மஜீத் படை’ ஆகிய இரண்டையும் அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் என்று அறிவித்திருக்கிறது.
யார் இந்த பலூசிஸ்தான் விடுதலை ராணுவம்? இவர்களின் நோக்கம் என்ன?
ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால், பாகிஸ்தானை இரண்டாக உடைத்து, ‘பலூசிஸ்தான்’ என்ற தனி நாட்டை உருவாக்குவதுதான் இவர்களின் லட்சியம்.
ஏன் இந்த கோரிக்கை?
பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 44% இந்த பலூசிஸ்தான் மாகாணம்தான். ஆனால், பாகிஸ்தான் உருவான காலத்தில் இருந்தே, தங்களுக்குரிய அங்கீகாரமோ, வளர்ச்சியோ கிடைக்கவில்லை என்பது இவர்களின் ஆதங்கம். இவர்களின் தாய்மொழி கூட உருது கிடையாது; இவர்கள் பேசுவது ‘பலூச்’ மொழி. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வேறு வழியில்லாமல் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டதாக இன்றும் இவர்கள் கருதுகின்றனர்.
ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்திருக்கும் இந்த இடம், அரசியல்ரீதியாக ரொம்பவும் முக்கியமானது. குறிப்பாக, இந்த பகுதியில் சீனா பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து CPEC எனப்படும் பொருளாதார வழித்தடத்தை உருவாக்கி வருகிறது. இந்த சீன முதலீடுகளையும், தங்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தையும் குறிவைத்து தாக்குவதுதான் இந்த பலூசிஸ்தான் அமைப்பின் முக்கிய செயல்பாடு.
சமீபத்தில் கூட, இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவியபோது, பாகிஸ்தான் ராணுவத்தை அவர்களின் நாட்டிற்குள்ளிருந்தே தாக்கி, பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியைக் கொடுத்ததே இந்த அமைப்புதான்.
இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்கா இவர்களைத் தீவிரவாத அமைப்பு என்று அறிவித்திருப்பது பாகிஸ்தான் அரசுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தைக் கொடுத்திருக்கிறது. இனிமேல், பலூச் மக்கள் மீது எடுக்கும் எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும், ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, சர்வதேச அரங்கில் சுலபமாக நியாயப்படுத்த முடியும். ஆனால், சர்வதேச அரசியல் நோக்கர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், “அமெரிக்காவின் இந்த அறிவிப்பு, பலூசிஸ்தான் மக்களை ஒருபோதும் சமாதானப்படுத்தாது. மாறாக, அவர்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி, போராட்டத்தை இன்னும் தீவிரமாக்கும்” என்று எச்சரிக்கிறார்கள்.