“நீங்க அநியாயமா அரசியல் பண்றீங்க!” – இப்படி ஆப்பிள் நிறுவனத்தை நோக்கிப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார் உலகப் பணக்காரரான எலான் மஸ்க். ஆப்பிள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஒரு பெரிய குண்டைப் போட்டிருக்கிறார்.
ஏன் இந்த திடீர் கோபம்? பிரச்சனையின் மையப்புள்ளி, ஆப்பிள் ஆப் ஸ்டோர்தான். எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI, ‘Grok’ என்ற ஒரு செயலியை வெளியிட்டுள்ளது. அதே சமயம், OpenAI நிறுவனத்தின் ‘ChatGPT’ செயலியும் இருக்கிறது.
மஸ்க் என்ன கேட்கிறார் என்றால், ஆப் ஸ்டோர்ல டாப் செயலிகள் பட்டியல்ல, ChatGPT தான் நம்பர் 1 இடத்துல இருக்கு. என்னோட Grok செயலி 5-வது இடத்துல இருக்கு. ஆனா, இது ஆப்பிள் வேணும்னே பண்ற ஒரு ஏமாற்று வேலை. அவங்க ChatGPT-க்கு ஆதரவா மத்தவங்கள வளர விடாம தடுக்குறாங்க. இது சட்டப்படி குற்றம்!” என்கிறார்.
இதுல என்ன தப்பு இருக்குன்னு நீங்க கேட்கலாம். இங்கதான் ஒரு பெரிய ட்விஸ்ட்டே இருக்கு. ஆப்பிள் நிறுவனமும், ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனமும் பார்ட்னர்கள். அதாவது, இனிமேல் வரப்போகும் எல்லா ஐபோன்களிலும் ChatGPT ஒரு முக்கிய அம்சமாக இருக்கப்போகிறது.
இதைச் சுட்டிக்காட்டிதான் மஸ்க் கேட்கிறார், “தன்னோட பார்ட்னர் கம்பெனியை முன்னிறுத்த, மற்ற போட்டியாளர்களை ஆப்பிள் அநியாயமாக அமுக்குகிறது. இது எப்படி நியாயமான போட்டியாகும்?” என்பதுதான் அவரின் வாதம்.
இது மட்டும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே, பிரபல ‘Fortnite’ கேம்மை உருவாக்கிய நிறுவனம், ஆப்பிள் மீது இதே போன்ற ஒரு வழக்குப் போட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம், இதே ஆப் ஸ்டோர் பிரச்சனைக்காக ஆப்பிளுக்கு சுமார் 5000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இப்போது, இந்த வரிசையில் எலான் மஸ்க்கும் இணைந்திருக்கிறார். டெக் உலகின் இந்த மாபெரும் மோதலில், எலான் மஸ்க் சொல்வதில் நியாயம் இருக்கிறதா? ஆப்பிள் உண்மையிலேயே அரசியல் செய்கிறதா?