அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான மோதல் அண்மை நாட்களில் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ‘ரஷ்ய பகுதியில் 2 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன்’ என டிரம்ப் பதிவிட்டு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இது ரஷ்யாவுக்கு எதிரான அணு ஆயுதப் போருக்கான மிரட்டலாக கருதப்பட்டது.
இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரான டிமிட்ரி மெட்வதேவ், ‘அமெரிக்காவின் எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் ‘டெட் ஹேண்ட்’ நடவடிக்கையை தூண்ட வழிசெய்யும். அதன் பிறகு பின்வாங்க மாட்டோம்’ என எச்சரிக்கை விடுத்ததால் நிலைமை இன்னும் மோசமானது.
‘டெட் ஹேண்ட்’ என்பது அணு ஆயுத கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு. எதிரி நாடுகள் அணு குண்டு வீசும் பட்சத்தில், அதனால் ஏற்படும் நில அதிர்வு, அணுக் கதிர்வீச்சு பற்றிய தகவல் அந்த அமைப்புக்கு அனுப்பப்படும். அதன் பிறகு தலைமை உத்தரவிட்டதும் குறிப்பிட்ட அந்த நாட்டின் மீது தனது தாக்குதலை நடத்தும். பொதுவாக அதிபருக்கு மட்டுமே அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடும் அதிகாரம் உள்ளது. ஆனாலும், எதிரி நாட்டின் அணுகுண்டு தாக்குதலில் ரஷ்யாவின் அதிபர் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டால், உத்தரவு கிடைக்கப்பெறாத நிலையில் அதை தானாக புரிந்துகொள்ளும்.
தொடர்ந்து அதிபரின் உத்தரவு இல்லாமலேயே ஏவுகணை தானாக வெளியில் வந்து பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள அணுகுண்டுகளுக்கு தகவல் அனுப்பும். பின்னர் அவை தானாக செயல்பட்டு, எந்த நாடு தாக்குதல் நடத்தியதோ அந்த நாட்டை குறிவைத்து தாக்கி அழித்து தரைமட்டமாக்கிவிடும். தற்போது இந்த ‘டெட் ஹேண்ட்’ அமைப்பை ரஷ்யா நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பித்து வைத்திருக்கிறது. இதை மனதில் வைத்துதான் மெட்வதேவ் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘டெட் ஹேண்ட்’ அமைப்பு மிகவும் மோசமான அணு ஆயுதம் என்பதோடு இப்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு துரிதமாகவும் மேம்பட்ட திறனுடனும் செயல்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த எச்சரிக்கை உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.