காலையில் எழுந்து, குளித்து, நல்ல உடை அணிந்து ஆபீசுக்குச் செல்கிறோம். அங்கே வேலை செய்ய நமக்கு சம்பளம் கிடைக்கும். இதுதான் நமக்குத் தெரிந்த உலகம். ஆனால், சீனாவில் இப்போது ஒரு புதிய உலகம் உருவாகி வருகிறது. அங்கே, இளைஞர்கள் ஆபீசுக்குச் செல்ல பணம் கொடுக்கிறார்கள். ஆம், நீங்கள் கேட்டது சரிதான். அங்கே வேலை செய்வதற்காக அல்ல, வேலை செய்வது போல் ‘நடிப்பதற்காக’
ஏன் இந்த வினோதமான பழக்கம்? இதற்குப் பின்னால் ஒரு பெரிய சமூக வலியே மறைந்திருக்கிறது.
சீனாவில் இப்போது வேலையில்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், 14 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதனால், படித்து முடித்த பல இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. ஆனால், ‘என் பையன். பொண்ணு வேலை இல்லாம வீட்ல சும்மா இருக்காங்க’ என்று பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ சொல்ல அவர்கள் பயப்படுகிறார்கள். அது ஒரு பெரிய அவமானமாக அங்கே பார்க்கப்படுகிறது.
இந்த சமூக அழுத்தத்தில் இருந்து தப்பிக்கத்தான், இந்த ‘நடிக்கும் ஆபீஸ்’களுக்குச் செல்கிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 400 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை கட்டணம் செலுத்தினால் போதும். உங்களுக்கு ஒரு டெஸ்க், Wi-Fi, காபி, மதிய உணவு என அசல் ஆபீஸ் போன்ற எல்லா வசதிகளும் கிடைக்கும். காலையில் கிளம்பி ஆபீஸ் செல்வது போலச் சென்று, மாலை வரை அங்கே இருக்கலாம். ஆனால், அங்கே போய் அவர்கள் சும்மா உட்கார்ந்திருப்பதில்லை.
பலர் அந்த அமைதியான சூழலைப் பயன்படுத்தி, உண்மையான வேலைகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். சிலர், புதிய திறன்களை ஆன்லைனில் கற்றுக்கொள்கிறார்கள். இன்னும் சிலரோ, சொந்தமாகத் தொழில் தொடங்குவதற்கான திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.
இப்படி ஒரு நிறுவனத்தை நடத்தும் உரிமையாளர் ஒருவர் சொல்கிறார், “நான் விற்பனை செய்வது வெறும் இடத்தை மட்டுமல்ல, ‘நான் பயனற்றவன் இல்லை’ என்ற கண்ணியத்தையும் சேர்த்துதான்” என்று.
கோவிட் காலத்திற்குப் பிறகு வேலையிழந்து, மன அழுத்தத்தில் இருந்த தன்னைப் போன்ற பலருக்கு இது ஒரு ஆறுதல் என்கிறார் அவர்.
சமீபத்தில் படித்து முடித்த மாணவர்கள், தங்கள் ஆசிரியர்களிடம் ‘இன்டர்ன்ஷிப்’ செய்வதாகக் காட்டிக்கொள்ளவும் இந்த இடத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆக, இது ஒரு தப்பித்தலா? அல்லது தங்களைத் தாங்களே தயார்ப்படுத்திக் கொள்ளும் ஒரு தந்திரமா?
சமூகத்தின் பார்வைக்காக, தங்களின் உண்மையான நிலையை மறைத்து, தினமும் ஒரு நாடகத்தை அரங்கேற்றும் இந்த இளைஞர்களின் நிலை, இன்றைய உலகின் போட்டி மனப்பான்மைக்கும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்திற்கும் ஒரு பெரிய சான்றாக இருக்கிறது.